பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது; புகார்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை; என்பதாகும். இதன்படி பார்த்தால், இலஞ்சம் தாண்டவமாடுவதாகச் சொல்வது தவறு என்று ஏற்படும்.

‘இந்து’ இதழ் இந்த முறையையும் விரும்பவில்லை. இந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருத்தமான காரணங்களையும் ‘இந்து’ காட்டியிருக்கிறது.

சர்க்காரால் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, முறைப்படி ஆராய்ந்து பார்த்து, நிர்வாகத் துறையில் மேல் மட்டத்திலிருந்து அடி மட்டங்கள் வரையில் இலஞ்ச ஊழல் இருக்கிறது என்று கூறி இருக்கிறது.

மத்திய சர்க்கார் அமைத்த தனிப் போலீஸ் பிரிவு 1963-ம் ஆண்டு 4857 புகார்களைப் பெற்றுப் பரிசீலிக்க வேண்டி வந்தது. 1957-ல் 2733 புகார்கள்! 1963-ல் 4857 என்று வளர்ந்து காட்டுகிறது.

புகார்களில் அற்பமானவை, ஆதாரமற்றவை என்று தள்ளிவிடத் தக்கவைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இந்தக் காரணங்களைக் காட்டி ‘இந்து’ நந்தாவின் கைவிளக்கு பயனில்லை என்பதை விளக்குகிறது.

எத்தனை சமாதானம் கூறினாலும், காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் வளர்ந்துவிட்டிருக்கிறது என்பதை மறைக்க முடியாது—மறுக்க முடியாது—பெரியவர்கள் மழுப்பிக் கொண்டிருக்கலாம்.

நிர்வாகத்திலே நெளியும் ஊழலும் இலஞ்சமும் இந்த விதம் இருக்கிறது—கருப்பஞ்சாறு பருகாதே போதை ஏறும், நிலை தடுமாறும் என்று ‘காச்சினது’ குடித்து விட்டுப் பேசுவது என்பார்களே அதுபோல, இத்தனை ஊழலை வைத்துக்கொண்டே பெரிய தலைவர்கள் பேசுகிறார்கள், நாட்டை ஆளும் யோக்யதை எமக்கன்றி வேறு எவருக்கும் இல்லை என்று.

இலஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டுமல்லவா? துணிந்து நான் கூறுவதைச் செய்வீர்களா?

முதலில், காங்கிரசின் மேல் மட்டத்தைத் துப்புரவாக்குங்கள். முடியுமா? துணிந்து செய்வீர்களா?