பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

இருக்கிறது. இலஞ்ச ஊழலுக்கு ஆணிவேர் இதிலே தான் இருக்கிறது.

வணிகர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு, ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களுக்குத் தேவைப்படும் லைசென்சு, பெர்மிட், கோட்டா ஆகியவைகள் வழங்கும் அதிகாரத்தை மந்திரிகளிடமிருந்து எடுத்து விடவேண்டும்! அந்த அதிகாரத்தை அரசியல் கட்சிகளைச் சேராத, சுயேச்சையாக உள்ளவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோர் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அத்தகைய குழுவில் எந்த மந்திரியும் உறுப்பினராக இருக்கக்கூடாது.

அமைச்சர்களும் அதிகாரிகளும், இலஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமூக விரோதிகளாகிய கெட்ட பெயரெடுத்தவர்களுடன் குலவக்கூடாது; அவர்கள் நடத்தும் விருந்துகளில் கலந்துகொள்ளக் கூடாது.

காண்ட்ராக்டர்கள், பெரிய வியாபாரிகள், பெரும் பணம் படைத்தவர்கள், பெரிய மோட்டார்கள் உடையவர்கள் இவர்கள் நடத்தும் பானவிருந்து விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் தம்மைத் தாமே தடுத்துக்கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால், அப்படிப்பட்டவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், பகிஷ்கரிப்பது சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி வைக்கும்.

சர்க்கார் மாளிகை விழாக்களில் இப்போது நடப்பதுபோல கண்டவர்களை அழைக்கக்கூடாது; இப்படிப்பட்டவர்களை அத்தகைய விழாக்களுக்கு அழைக்கக்கூடாது.

என்ன அண்ணா இது! ஒரே அடியாகக் காங்கிரஸ் மந்திரிகளை, எந்த அதிகாரம் அவர்களுக்கு ஜொலிப்பையும்—மிதமிஞ்சிய மதிப்பையும் தருகிறதோ அதை விட்டுவிடச் சொல்லுகிறாயே! எந்த முதலாளிகளின் நன்கொடை கொண்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ அந்தப் பணத்துக்கும் உலைவைக்கிறாயே! இது நடக்கக் கூடிய காரியமா? உன் பேச்சைக் கேட்பார்களா? என்றுதானே தம்பி! கேட்கிறாய்? தம்பி! அவ்வளவு பெரியவர்கள் இப்படி இப்படி நடந்தாகவேண்டும் என்று என்னால்