பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அவ்விதம் நம்பினார்கள்; நம்பிக்கை கொள்ளும்படி அவர்கள் பேசியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, ஒதுங்கி இருப்பார்கள், ஒப்புக்கு வேலை செய்வார்கள் என்று எவர்களைப்பற்றி நமது நண்பர்கள் கூறிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அனைவரும் தீவிரமாக வேலை செய்தனர்.

அது தவறு என்று நான் கூறவில்லை; அது முறையுங்கூட.

ஆனால் அவர்கள், உண்மையில் ஒதுங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதனை நமது தோழர்கள் முன்னதாகவே உணராமலிருந்தது, தவறு இல்லையா?

கசப்பு, வெறுப்பு, பகை எனும் உணர்ச்சிகள் கொந்தளிக்கும் உள்ளம் என்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாகத்தான் காங்கிரசில் உள்ளவர்களில் பலர், சாதாரண நாட்களில் பேசிக்கொள்வார்கள்; நம்மிடமே கூடப் பேசுவார்கள்.

இந்தப் பக்தவத்சலம் இப்படித் துப்பாக்கித் துரைத்தனம் நடத்துவது, அதற்கு நாங்கள் துதிபாடிக்கிடப்பது என்றால், அது எப்படி முடியும், எத்தனை நாளைக்கு முடியும்?

நான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன், “இந்தி ஆட்சிமொழி ஆகக்கூடாது. ஆங்கிலம் நீடித்திருக்க வேண்டும்; இதற்கு உத்தரவாதம் சட்டப்படி கிடைக்காத வரையில், நான் காங்கிரசுக்காக வாதாட முடியாது” என்று.