பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

ஆலை:– உம்முடைய வாதம் சரியோ, தவறோ, நான் நீண்ட காலமாகக் காங்கிரஸ் பக்தன் அதனால் என்னால் ஆனது செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்போது வருகிறார் மந்திரி?

மண்:– நீங்கள் நாள் குறிப்பிட்டதும்...

ஆலை:– என் தகப்பனாரின் தலைத் திவசம் இந்தப் புதன்கிழமை...

மண்:– நினைவுநாள் கொண்டாடிவிடுவோம்..... மந்திரி தலைமையில்...

ஆலை:– அன்றைக்கே, அமெரிக்கக் கூட்டுறவுடன் நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய தொழிற்சாலைக்கான அடிப்படைக் கல்நாட்டு விழாவும்...

மண்:– நடத்திவிடுவது....இதற்கு ஒரு மந்திரி....அதற்கு ஒரு மந்திரி....

ஆலை:– மந்திரியிடம், தனியாகச் சில விஷயங்கள் பேச...

மண்:– ஒரு மணி நேரம் ஒதுக்கச் சொல்கிறேன், போதுமா?

ஆலை:– ஒரு முக்கியமான விஷயம்...மந்திரி இங்கு வருகிறபோது, என்னை மதிப்புக் குறைவாக நடத்திய அதிகாரி இருக்கிறாரே, தெரியுமே உங்களுக்கு, அவர் இருக்கக்கூடாது...

மண்:– மாற்றிவிட்டால் போகிறது, வேறு இடத்துக்கு.

ஆலை:– மகாத்மா காந்தியின் அருளால், தேர்தலில் நமக்கு ஜெயம் நிச்சயம்...

மண்:– உங்களுடைய ஆசீர்வாத பலம் உண்டு என்று தெரிந்த பிறகுதான், நான் தேர்தல் வேலையிலே ஈடுபட்டேன்.

முற்போக்காளர்:– என்ன இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் முதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்தபடி இருக்கிறது.