11
இவர்களின் தகுதியையும் திறமையையும், இவர்களால் நாடு பெற இருக்கும் பெருமையையும் வளர்ச்சியையும் எண்ணும்போது, எல்லோருக்கும் ஏற்படுவது போல எனக்கும் இனிப்பான உணர்ச்சிதான் எழுகிறது. என்றாலும்......
நான் இந்தப்பட்டியலைத் தந்துள்ளதன் நோக்கம், விஞ்ஞானத் துறையினரின் தொகை வளர்ந்து வருவதனைக் காட்டுவதற்காக இருப்பின், மகிழ்ச்சி குறைவின்றிக் கொள்வேன். நான் இந்தப் பட்டியலைத் தந்திருப்பது, அதற்காக அல்ல, எப்படிப்பட்டவர்களின் கருத்தையெல்லாம் துச்சமென்று மதித்திடும் துரைத்தனம் நடத்தப்படுகிறது, எவ்விதமான தகுதி திறமை படைத்தவர்களெல்லாம் ஏனோ தானோக்கள் ஆக்கப் பட்டுவிடுகின்றனர் இந்த ஆளவந்தார்களால் என்பதை அறிவதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வேதனையைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உன்னை அழைக்கவே இந்தப் பட்டியலைக் காட்டினேன்.
எந்த அரசு எனினும், எம்முறையில் நடாத்தப்படும் அரசு எனினும் அந்த அரசு அந்நாட்டு நல்லறிவாளர்களின் நட்புறவு பெற்றிட வேண்டும்—நாற்படையினும் மேலானதோர் நற்படையாகிடும் அந்த நட்புறவு. சொல்லேர் உழவர் என்பது கவிதை புனைவோரை மட்டும் குறித்திடுவதாகாது...அறிவுக் கழனியில் பணியாற்றிடும் படைப்பாளர்கள் அனைவரையும் குறிப்பதாகும். அத்தகைய அறிவாளர்களைப் புறக்கணிக்கும் அரசு, புறக்கணிக்கப்பட வேண்டிய அரசாகிவிடும்—ஓர் நாள். இவை, ஆன்றோர் மொழிந்தவை. இன்றுள்ள ஆளவந்தார்களோ, ஏன் அடிக்கடி, எதற்கெடுத்தாலும் ஆன்றோர், சான்றோர் என்றெல்லாம் அழைக்கின்றீர்கள்; நாங்கள் இருக்கின்றோமே, போதாதோ என்கிறார்கள்! சொல்வது மட்டுமல்ல. அறிவாளர்கள் கூறுவதை மருந்துக்கும் கொள்ளமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர்—கற்பாறை போல!!
நான் குறிப்பிட்டேனே ஒரு பட்டியல்—விஞ்ஞான வித்தகர்களின் பெயர் வரிசை—இது மேலும் நீண்டதாகிடும். வேறு பற்பல கல்லூரிகளில் உள்ளவர்களின் பெயர்களையும் சேர்த்தால் நான் தந்துள்ள பட்டியல், தயாரித்தால் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பட்டியலில் ஒரு சிறு துண்டு.