பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

இவர்கள், மொழி வெறி, வகுப்பு வாதம், ஜாதிப் பித்து, கட்சி மாச்சரியம், பதவிமோகம், வன்முறையில் நாட்டம், குழப்பவாதம், பிளவு மனப்பான்மை போன்ற எவற்றினுக்கும் பலியாகிவிடக் கூடியவர்கள் அல்லர். அறிவாலயத்தில் உள்ளவர்கள். எதற்கும், தாமாக முன்னாலே வந்து நிற்கும் இயல்பினருமல்லர். சந்தடி, சச்சரவு விவாதம் ஆகியவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு, மனநிம்மதியுடன் நுண்ணறிவு பெற்று வருபவர்கள். உனக்கா எனக்கா! பார்த்துவிடலாம் வா! என்ற வம்புக்கும் போட்டிக்கும் வருபவர்களல்லர், தமக்கென்று அமைந்துள்ள கோட்டத்தில் இருந்துகொண்டு. அறிவாற்றலைப் பெற்றுக்கொண்டு வருபவர்கள்—பிறகு அதனை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த.

அத்தகைய அறிவாளர்கள், கூடிப் பேசி, பிரச்சினையின் பல கோணங்களையும் கண்டறிந்து, ஒரு கருத்தைக் கொண்டு, அதனை அரசு நடாத்திடும் லால்பகதூர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர் — நல்ல விளக்கத்தையும் இணைத்து.

இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்கக்கூடாது என்பதும், ஆங்கிலத்தை அகற்றிவிடக் கூடாது என்பதும் அவர்கள் லால்பகதூருக்குத் தெரிவித்திருக்கும் கருத்தின் சுருக்கம்.

அரசியல்வாதிகள், ஆளுங் கட்சியைக் குறை கூற அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள, மொழிப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டு விடுகிறார்கள் என்று ஆளவந்தார்கள் அடித்துப் பேசுகிறார்கள்—தாமே அரசியல்வாதிகள் என்பதை மறந்து; அண்ணல் காந்தியாரின் பெயர் கூறி—அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டவர்கள் என்பதனையும் மறந்து.

இது பொருளற்ற குற்றச்சாட்டு என்ற போதிலும், இதனைக்கூடப் பட்டியலில் காணப்படுவோர்மீது வீசுவது இயலாததாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றுப் பயன் தரும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள்—அரசியல் அங்காடியில் நுழைந்திட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லர்.

இத்தகைய அறிவாளர்களின் பேச்சைத் தட்டி நடக்கக்கூடாது, இத்தகையவர்களை அலட்சியப்படுத்தக்