பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கூடாது என்று. ஆளவந்தார்கள் மேற்கொண்டாக வேண்டிய நெறி, அதிலும் குடியாட்சிமுறை காரணமாக ஆள வந்தார்களாகிவிட்டவர்கள், இந்த நெறியைக் கடைப்பிடிக்கப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆனால், லால்பகதூர் என்ன கருதுகிறார்! பட்டியலைப் பார்த்து என்ன கூறுகிறார்!! லால்பகதூர் இருக்கட்டும், பெரிய பதவியில் உள்ளவர்; உனக்கு அறிமுகமான மண்டலத்தைக் கேட்டுப்பாரேன்; பட்டியலைக் காட்டிப் பாரேன்! ஒரேவரியில் பதில் வரும், “இவர்கள் கூறிவிட்டால் போதுமா!” என்று திகைத்து நிற்பாய், அவர் தொடருவார், “இவர்களுக்கு என்ன தெரியும்?” என்பார்! கணைகள் தொடரும், சில நூறுபேர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். தெரியுமா?” என்பார். இறுதியாக, “பொதுமக்களுக்கு எது நல்லது என்பதுபற்றி இந்தப் புத்தகம் புரட்டிகளுக்கு என்ன தெரியும்? சதா பொது மக்களோடு பழகிப் பழகி, தொண்டாற்றித் தொண்டாற்றி, அதற்கே எம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட எமக்கன்றி, இந்த B. A. க்களுக்கும், M. A. க்களுக்கும், B.Sc.களுக்கும், M. Sc. களுக்கும், B. E. க்களுக்கும், M. E. க்களுக்கும், Ph. D. களுக்குமா தெரியப்போகிறது?” என்று கேட்பார். அவருடைய கோபம் அந்த அளவோடு அடங்கிப் போய்விட்டால், தம்பி! நீ தப்பிப் பிழைக்கலாம்; இல்லையோ, ஆரம்பிப்பார் மளமள வென்று; படித்தவனெல்லாம் அறிவாளியா! படிக்காத மேதை இல்லையா, படித்தால் மட்டும் போதுமா! படித்தவன் படும்பாடு தெரியுமா? எத்தனை B. A. வேண்டும். சோறு போட்டால் போதும் விழுந்து கிடப்பார்கள் காட்டிய இடத்தில்! - இப்படிப்பட்ட துந்துபி தொடரும். காரணம் என்ன, அவருடைய ஆர்வத்துக்கு? அவருடைய கண்களுக்கு மிகப் பெரியவராக, மிகப்பெரிய இடத்தில் உள்ளவராக உள்ளவர்களிலே பலர், படிக்காமலேயே பாராளும் பக்குவம் பெற்றவர்களாகி விட்டது தெரிகிறது. தெரியும்போது, படித்தவன் என்றால் என்ன, அதற்காகத் தனி மதிப்புத் தர வேண்டுமா என்ன! என்று தோன்றுகிறது. பள்ளிக்கூடத்துக்கும் தனக்கும் நடைபெற்ற ‘ஒத்துழையாமை’ இயக்கம் வேறு அவருக்கு நினைவிற்கு வந்துவிடுகிறது. வந்ததும் வாயிலிருந்து வார்த்தைகள் பொறி பொறியாகக் கிளம்புகின்றன.