பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற வள்ளுவர் வாக்கு, இதற்கும் சேர்த்துத்தான் என்பதை உணரலாம்.

ஆனால், நமது கருத்தை எடுத்துக் கூறிவிட்டோம், நமது கடமை முடிந்தது என்ற அளவுடன் இருந்துவிட்டால் பயன் இல்லை. அதனைச் சிறுபான்மையினர் கருத்து என்று கூறுபவர் வெட்கித் தலைகுனியும்படி, பெரும்பான்மையினரின் கருத்து ஆக்கிக் காட்டிட வேண்டும். உண்மையை உணருவது, உண்மையை உரைப்பது என்பதுடன், உண்மையை நிலைநாட்டுவது என்பது இணையவேண்டும்.

என்ன கூறினார் மண்டலம்? நினைவிற்கு வருகிறதா! பொதுமக்களிடம் தமக்குத்தான் தொடர்பு இருக்கிறது, இந்தப் பட்டதாரிகளுக்கு அல்ல என்றார். தமக்குப் பொதுமக்களிடம் தொடர்பு இருப்பதால், பொதுமக்களின் விருப்பம் எது, அவர்களுக்கு நல்லது எது என்பது தமக்கே தெரியும் என்று மார் தட்டுகிறார். அந்தப் பொது மக்கள் தொடர்பை, இந்த அறிவாளர்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்; இயலாததா? மண்டலம் கூறுகிறாரே எனக்குப் பொதுமக்கள் தொடர்பு உண்டு என்று. அந்தப் பொதுமக்கள் விஞ்ஞானத்துறை பயில் அறிவாளர்களை வெறுத்தா ஒதுக்கி விடுவர்? அவர்களுக்கு உள்ள குறையே, இந்த அறிவாளர்கள் பழகமாட்டேன் என்கிறார்களே என்பதுதான்! ஆகவே, பெங்களூர் விஞ்ஞானக் கல்லூரி பயில் வித்தகர்கள், தாம் கொண்டுள்ள கருத்தினைச் சிறுபான்மையினரின் கருத்து என்று ஆளவந்தார்கள் அலட்சியப்படுத்தினால் மனம் தளர்ந்துவிடாமல், இக்கருத்தினைப் பெரும்பான்மையினர் கருத்தாக்கிக் காட்டுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு பொது மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, கருத்தினைப் பரவிடச் செய்திடவேண்டும். முயற்சியில் ஈடுபட்டால், எத்தனை எளிது என்பதும், எத்துணை சுவை உளது என்பதும், என்னென்ன பயன் விளைகின்றன என்பதனையும் அறிந்துகொள்ளலாம். அதிலும் இந்த மொழிப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் செய்யவேண்டிய பணி நிரம்ப உளது.