பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

இங்கு நான் கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது, கல்லூரி முதல்வர்கள் என்னிடம் தனியாக, அரசியல் பேசாதிருக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்—ஒருவிதமான அச்சத்துடன். அன்று செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் அதுபோல ஏதும் கூறவில்லை. உற்சாகமாக வரவேற்று, நண்பர்போல் பழகினார்.

மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். துளியும் எதிர்பாராத நிலையில் இந்த வாய்ப்புக் கிடைத்தது, காரணம் என்ன இதற்கு என்று அறிந்துகொள்ள இயலவில்லை—துவக்கத்தில்.

அந்தக் கல்லூரி மாணவர் இருவர் ஒருநாள் மாலை என்னைக் கண்டு தங்கள் கல்லூரியில் சொற்பொழிவாற்ற வரவேண்டும் என்று அழைத்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது. வருவதற்கு இசைவு தெரிவித்து விட்டு, எதற்கும் முறைப்படி, உங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு அழைப்புக் கடிதம் பெற்று அனுப்புங்கள் என்றேன்.

“தேவைகூட இல்லை. எவரெவரை அழைத்துப் பேசச்சொல்வது என்பது மாணவர்மன்றம் பெற்றிருக்கும் உரிமை. முதல்வர் அதற்குக் குந்தகம் விளைவிப்பதில்லை. நாங்கள் ஆண்டுதோறும் ஆண்டுரூஸ் சொற்பொழிவுகள் எனும் தொடர் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அதிலே, முன்பு ஜெயப்பிரகாஸ் நாராயணன், ஹிரேன் முக்கர்ஜி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மாணவர்களாகவே ஒரு ஆங்கில மாத இதழ்கூட வெளியிட்டு வருகிறோம்; ஆன்செட் என்பது இதழின் பெயர்; இதழ்கள் நாளை அனுப்பிவைக்கிறோம்; நீங்கள் விரும்புகிறபடியே கல்லூரி முதல்வரின் அழைப்புக் கடிதமும் பெற்று அனுப்புகிறோம்” என்று கூறினர் சொன்னபடியே செய்தனர். ஆன்செட் இதழ் கிடைத்தது. அதைக் கண்ட பிறகுதான், ஏன் என்னை அழைக்க விரும்பினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அந்த இதழில் தி. மு. கழகத்தைத் தாக்கி ஒரு கட்டுரையும், விளக்கமளித்து, ஒரு கட்டுரையும் அந்த விளக்கத்துக்கு மறுப்பு அளித்து ஒரு கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தன, முன்னதாகவே, கழகம் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்குச் சென்றுவிட்டிருக்கிறது!