பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. துளியும் தொடர்பற்ற ஒருவனுடைய பேச்சை, அக்கறையற்று, ஒருகாதில் வாங்கி மறுகாது வழியாக விடுபவர்களாக இருந்துவிடுவார்களோ, பேச்சு பயனற்றுப் போய்விடுமோ என்று நான் அச்சப்பட்டுக் கொண்டேன். அச்சம் பொருளற்றது என்பதனை மாணவர் போக்கு விளக்கிக் காட்டிற்று.

“சிக்கலும், மாறுபட்ட கருத்துகள் மிகுந்ததுமான ஒரு பிரச்னை பற்றி என்னை ஏன் பேச அழைத்தார்கள் என்று நான் யோசித்தேன்; என்னைப் பற்றியே பல மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், நான் தான் சிறுபான்மையோர் பிரச்சினை குறித்துப் பேசப் பொருத்தமானவன் என்று மாணவர்கள் தீர்மானித்தார்கள் போல் தெரிகிறது சிறுபான்மையோர் பிரச்சினை மட்டுமல்ல. நானே விவாதத்துக்கு உரிய ஆசாமி தான்!” என்று கூறினேன். பிறகு, சிறுபான்மையோர் எனபதற்கு என்னென்ன பொருள் கொள்ளப்படுகின்றன, எங்கெங்கு இந்தச் சிறுபான்மையோர் உள்ளனர் என்பது குறித்து விவரம் அளித்தேன்.

பெரும்பான்மையோர் என்று ஒரு பகுதி சமூகத்தி இருப்பதனால், இயற்கையாகவே சிறுபான்மையோர் என்ற பகுதி இருந்து தீரவேண்டி இருக்கிறது. இது இன்று நேற்று முளைத்ததுமல்ல; இட்டுக் கட்டப்பட்டதுமல்ல; பொருளற்றதுமல்ல; வெறும் பொழுது போக்குப் பிரச்சினையுமல்ல; மிக முக்கியமானது; நெடுங்காலமாக இருந்து வருவது; சிக்கலைப் போக்கும் வழி இதுதான் என்று திட்டவட்டமாக எவரும் எளிதிலே கூறிவிட முடியாத விதமான கடினமான பிரச்சினை இது. மாணவர் மன்றம் இத்தகைய பிரச்சினை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்காட்டுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், மிகப் பெரியவர்கள் சிலர், சிறுபான்மையோர் பிரச்சினை, வகுப்புவாதப் பிரச்சினை, ஜாதிப் பிரச்சினை என்பவைகள் சிலலறைப் பிரச்சினைகள்; அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், கல்வி அறிவு பெருகிவிட்டால், தொழிற் புரட்சி ஏற்பட்டுவிட்டால், இந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமாக மடிந்தொழியும் என்று கூறிவருகிறார்கள்; பொருளாதார வளர்ச்சி, தொழிற் புரட்சி, கல்வி வளர்ச்சி எல்லாம் வியந்து பாராட்டத்தக்க அளவு