28
பண்டைய கிரேக்கத்தில் குடியாட்சிமுறை நடைபெற்ற விதத்திற்கும் இப்போதுள்ள குடியாட்சி முறைக்கும் நிரம்ப மாறுபாடு—இயற்கையான காரணத்தால் விளைந்த மாறுபாடு—ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கிரேக்கத்தில், ஏதன்ஸ் நகரமக்கள் ஐம்பது ஆயிரம்பேர்—எந்த அரசியல் பிரச்சினையையும் கவனிக்க, கருத்தளிக்க, முடிவெடுக்க எல்லாமக்களும் ஒருசேரச் சந்தைச் சதுக்கத்தில் கூடுவர். இப்போது, குடியாட்சி முறை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளுவது என்ற கொள்கை அடிப்படையில் இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் மூலமாகத்தான் ஆட்சி நடத்தப் படுகிறது—நேரடியாக அல்ல—மக்கட் சமூகம் முழுவதனாலும் அல்ல. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்கும், தேர்ந்தெடுக்கும் மக்களைவிட எண்ணிக்கையில் சிறிய அளவினராகத்தான் இருக்க முடியும்—சிறுபான்மையினர்! நாங்கள் சிறுபான்மையினர் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஆளவந்தார்கள் வாதாடினால் எப்படி இருக்கும்; விந்தையாக மட்டுமல்ல, விபரீதமாகவும் இருக்கும்.
ஆகவே, இந்தப் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டிய சரியான முறை, ஜாதி, மதம், மொழி, செல்வம், வலிவு, எனும் ஏதேனும் ஒன்றைத் துணைக்கொண்டு சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆதிக்கம்பெற்று, ஆதிக்கக்காரர்களின் மதம், ஜாதி, மொழி, கோட்பாடு என்பதனை ஏற்றுக்கொள்ளாமல், தமக்கென்று மதம், ஜாதி, மொழி, கோட்பாடு ஏதாகிலும் பற்றுடன் கொண்டு, அவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பெறவேண்டுமென உறுதியுடன் மற்றோர் பகுதியினர் இருப்பின், அங்குச் சிறுபான்மையோர் பிரச்சினை எழுகிறது என்பதுதான்.
இன்று நீக்ரோ மக்கள், உலக முழுவதும் உள்ளவர்களைக் கணக்கெடுத்தால், அமெரிக்கர்களை விட எண்ணிக்கையில் அதிக அளவு என்று கூறலாம். ஆனால், அமெரிக்கா என்ற எல்லைக்குள்ளாக மட்டும் கணக்கெடுத்தால், நீக்ரோக்கள் சிறுபான்மையினர்,
ஆகவே, சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற கணக்கு, அதற்கு நாம் பயன்படுத்தும் அளவுகோல், கணக்கெடுக்கும் இடம், முறை ஆகியவற்றையும் பொறுத்திருக்கிறது.