பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் இரண்டு தொகுதிகளின்
முதற்பதிப்பின்

முன்னுரை

திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம்.ஏ.

‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூல் வடிவம் கொண்டு அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல்வடிவம் பெற்றால், அந்த நூல், கருத்துக் கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும் பெருந்தொண்டை, ‘பாரி நிலையத்தார்’ செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன். பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலா வரும் கதைகள்— கட்டுரைகள்—நாடகங்கள்—திரைப்பட வசனங்கள்—எழுத்தோவியச் சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றின் தமிழ் மணம் மிகச்சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசைபயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும், உண்மையும் உயர்வும், திண்மையும் திட்பமும், சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும், தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தோர் அனைவரும் நன்கு உணர்வர் தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லாவகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.