பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

காரியத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. நீங்கள், உங்கள் மாநிலத்திலேயே, சிறுபான்மையினராகத்தானே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை, எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொண்டிருக்கச் சொல்கிறாய். தமிழக அரசு நடாத்துபவர் வேறு; அந்த அரசு இப்படி இப்படி நடத்தப் படவேண்டும் என்று கூறிடும் எதிர்க்கட்சியாக—சிறுபான்மைக் கட்சியாக—தி. மு. கழகம் என்ற நிலை இருக்கும்வரையில், நமது கொள்கை, ஏழ்மையால் எழில் கெட்டு, இளைத்துக் கிடக்கும் ஏந்திழை மருத்துவரிடம் பெற்ற மருந்துக்குப் பணம் தரக்காசு இன்றி, காதிலுள்ளதைக் கழற்றிக் கடை நோக்கி நடந்திடும் நிலையினில் தான் இருக்கும். இந்த நிலை உனக்குச் சம்மதம்தானா?


28-3-1965

அண்ணன்,
அண்ணாதுரை