பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

கட்சி பணத்தை அள்ளி வீசுவார்களே அண்ணா! அங்கு நாம் வெற்றிபெற வெகு பாடுபட வேண்டுமே! என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? யாரார் தருமபுரி சென்று வந்தனர்? நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்? என்ற இவைபற்றிக் கூறுவார், எனக்குக் கவலையைப் பிய்த்துக்கொண்டு புன்னகை கிளம்பும்.

சிறை மிகச் சக்தி வாய்ந்தது என்று, ஆணவம் பிடித்த நிலையில் உள்ள எந்தச் சர்க்காரும் எண்ணிக் கொள்ளுகிறது, சிறையிலே போட்டு அடைத்ததும், வேதனை வென்றுவிடும், உணர்ச்சிகள் மங்கிவிடும், உறுதி தளர்ந்து விடும் என்ற நினைப்பு; நிலைகெடப் போகும் கட்டத்தை நோக்கி நடைபோடும் எந்தச் சர்க்காருக்கும். சிறை அவ்விதமானதல்ல; அந்த இடம், உறுதியைக் கெட்டிப்படுத்தி வைக்கும் உலைக்கூடம்; சிந்தித்துச் சிந்தித்துத் தமது சிந்தனைச் செல்வத்தைச் செம்மையாக்கிக் கொள்ள வைக்கும் பயிற்சிக்கூடம், இதனை அறிய முடிவதில்லை, அடக்குமுறைச் சுவையால் நினைவு இழந்துவிடும் அரசுகளால். நெல்லையில் சிறைப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவு முழுவதும் எதன்மீது என்பதனை அறிந்து கொள்வாரானால், முதலமைச்சர் தமது முறை தவறு என்பதனை உணர்ந்து கொள்வார். மக்களின் நலனுக்காகக் கழகம்; கழகத்தின் சார்பிலே செயலாற்றினோம்; அந்தச் செயலைத் தவறானது என்று திரித்துக் கூறிச் சர்க்கார் நம்மைக் கொடுமைப்படுத்துகிறது; நமக்கு இழைக்கப்படும் கொடுமையினைக் கண்டும் கேட்டும் இலட்சக்கணக்கானவர்கள் இதயம் துடிக்கிறது; அந்தத் துடிப்பிலிருந்து கிளம்பும் மிகப் பெரிய வலிவு எத்தனை பெரிய ஆணவ அரசினையும் வீழ்த்தவல்லது; அந்த வலிவினை நாடு பெற நாம் நமது வலிவிலே ஒரு பகுதியைச் சிறைவாழ்க்கை காரணமாக இழப்பது தேவை, முறை, அறம் என்ற எண்ணம், சிறையில் உள்ளவர்களுக்குச் செந்தேன். அந்தச் சுவையில் திளைத்திருக்கக் கண்டேன், உடல் இளைத்தாலும் உள்ளம் களைத்திடாது என்ற நிலையில் உள்ள கருணாநிதியிடம். ஒரே ஒரு கவலைதான் இருக்கிறது; தருமபுரி பற்றி! ஆனால், அதிலேயும் கவலையை விரட்டியடிக்கக்கூடிய ஒரு நம்பிக்கையும் இருக்கிறது; எப்படியும் கழகம், தருமபுரித் தேர்தலில் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை கருணாநிதியைச் சிறையில் போட்டடைத்து வைத்திருக்கிறதே என்பதனை எண்ணி