பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அரசினருக்கு ஆதரவாளர் எவர்? என்பதே புரியவில்லை. அவ்வளவு விரிவாகிவிட்டது இந்தி எதிர்ப்புணர்ச்சி.

காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இந்தி எதிர்ப்புணர்ச்சி கொண்டுள்ளது மட்டுமல்ல, அதனை வெளியே காட்டிக்கொள்வதிலே தயக்கம் காட்டவில்லை, ஆர்வத்துடன் பேசுகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் அரசு கலக்கம்கொண்டு விட்டிருக்கிறது; எந்த நேரத்திலும் தனது செல்வாக்கு சரிந்து போய்விடக்கூடும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது.

இத்தனைக்கும் காரணம் இந்தக் கழகம் அல்லவா! தேசியக்கட்சி, சுயராஜ்யத்துக்காகப் போராடிய புனிதக் கட்சி என்ற பாசத்துடன் ஆதரித்துவந்த மாணவர்கள், இன்று எதிர்ப்புச் செய்கிறார்களே! நாட்டின் பெரிய கட்சி, நிலையான ஆட்சியை நடாத்திடும் திறமை பெற்ற கட்சி என்பதற்காக நம்மை ஆதரித்து வந்தவர்கள் வழக்கறிஞர்கள்—அவர்கள் அல்லவா வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டிருக்கிறார்கள், இந்தியை எதிர்க்க!!

நிர்வாகத் திறமைக் குறைவு, ஊழல் ஊதாரித்தனம், ஆகாத சட்டங்கள், ஆர்ப்பரிப்பு அமுல்கள் என்பவைகளைக் கூடப் பொறுத்துக்கொண்டு, இன்றைய நிலையில், அமைதியான ஆட்சிநடத்திச் செல்லக்கூடிய பக்குவம் பெற்றுள்ள கட்சி காங்கிரஸ் கட்சிதான், மற்றவை நாட்டைக் கெடுத்திடும் நச்சுக் கொள்கை கொண்டவை என்று கூறி ஆதரவு அளித்து வந்த இதழ்கள் இன்று இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டிடும் பணியிலே மும்முரமாகி விட்டுள்ளனவே! இந்த முனைகளிலே கிடைத்துக் கொண்டுவந்த ஆதரவை இழந்துவிட்டோமே! இனி எதிர்காலம் எவ்விதமோ!! என்று எண்ணும்போது பதவிச் சுவையைப் பருகிப் பழகிவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மனம் பதறுகிறது, பார்வையில் பொறி பறக்கிறது, பேச்சிலே தடுமாற்றம் ஏற்படுகிறது.

இத்தனைக்கும் காரணம்? கழகம்! கழகம் ஒழிக்கப் பட்டால், மற்ற முனைகளில் கிளம்பியுள்ள எதிர்ப்பு தன்னாலே முறிந்துவிடும்; ஆகவே, பிடி! அடி! சுடு! என்ற ஆர்ப்பரிப்பு முறையில் அரசு, கழகத்தைத் தாக்கும் செயலில் முனைந்து நிற்கிறது.