41
கழகம் கூறிடும் பேச்சை. யார் மதிக்கிறார்கள்? எவர் பொருட்படுத்துகிறார்கள்? எவர் ஏற்றுக் கொள்கிறார்கள்? என்று பேசிய இறுமாப்பு இன்று இல்லை; எதை எதையோ பேசுகிறார்கள், மக்கள் நம்பித் தொலைக்கிறார்களே! எப்படி எப்படியோ பேசுகிறார்கள்; மக்கள் மனம் மாறிவிடுகிறார்களே!! என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.
கழக ஏடுகளிலே வரும் சொற்கள், ஆட்சியாளர்களின் ஆணவக்கோட்டை மீது வீசப்படும் வெடிகுண்டுகள் என்றாகிவிட்டன, இன்று. அன்று? சொற்களா? பொருளற்ற பிதற்றல் என்று பேசினர் ஆளவந்தார்கள். அன்று கழகம் எழுப்பிய முழக்கங்களைக் காட்டி, எந்தப் பிரிவின்படி வழக்குத் தொடுக்கலாம் என்று துடித்தபடி உள்ளனர்.
இன்று காங்கிரஸ் அமைச்சர்களின் மேஜைமீது, காந்தியாரின் ஏடுகளும், பண்டித ஜவஹர்லாலின் சுய சரிதமும் இல்லை, பாதுகாப்புச் சட்டத்தின் பிரதிகள்!
பிடி 30ல்! தொடு 41ல்! போடு 54! ஆகட்டும், 147, 148 வீசுக!-இவ்விதம் உள்ளனர்.
கழகத்தின் ஒவ்வொரு அசைவும் அச்சம் தருகிறது ஆட்சியாளர்களுக்கு.
இவர் இவ்விதம் பேசியது எதற்காக? இவர்மீது என்னவிதமான வழக்குத் தொடரலாம்? என்ற இதே நினைப்புடன் உள்ளனர் இன்று—அன்று? கழகமா? தூ! தூ! அதை ஒரு பொருட்டாக மதிப்போமா! யார் இருக்கிறார்கள் கழகத்தில்? ஒரு பத்துப் பேர்! இவர்களை நாடு சீந்துமா!! என்று பேசிக்கிடந்தார்கள். கழக ஏடுகளிலே வெளியிடப்படும் கேலிப் படங்கள், ஆட்சியாளர்களின் கண்களைக் குத்துகின்றன, மனத்தைக் குடைகின்றன; நெஞ்சை அச்சம் பிய்த்து எடுக்கிறது.
இருக்கவே இருக்கிறது பாதுகாப்புச் சட்டம்—அதனை வீசு! பிடித்துப்போடு உள்ளே!! என்கிறார்கள்.
கருணாநிதியை ஏன் சிறைபிடித்தீர்கள்?
அவர் வெளியே இருந்தால் அமைதியைக் கெடுத்து விடுவார்; அதனால்!!