பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இல்லையென்றால், கழக எழுத்துக்கு மறுப்பளித்து மக்களைத் தமது பக்கம் அழைத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி ஏன் தமது ஆதரவாளர்களான எழுத்தாளர்களைப் பயன்படுத்தாமல், பாதுகாப்புச் சட்டத்தைத் தூக்கி வீசுகிறது!

மற்றெல்லாப் படைக்கலன்களும் தீர்ந்துபோய்விட்டன என்பதையன்றோ இந்தப் போக்கு காட்டுகிறது?

நிலபுலம் விற்றுச் செலவாகியான பிறகு, தட்டுமுட்டுச் சாமான்களை விற்றாகிலும் வயிறு கழுவிக் கொள்ள முனைவது போன்ற நிலைக்கல்லவா காங்கிரஸ் கட்சி வந்து விட்டிருக்கிறது.

சாதாரணச் சட்டம் போதவில்லையே காங்கிரஸ் அரசுக்கு! பாதுகாப்புச் சட்டமே அல்லவா தேவைப்படுகிறது. நிலைமையைச் சமாளிக்க!! நெறித்தபுருவமே போதும் எதிரிகளை முறியடிக்க என்று முடுக்குடன் பேசித்திரிந்தவன், பிறகு அடி ஆட்களைத் தேடி அலைந்த கதை போலாகிவிட்டதே.

முரசொலியில் வெளிவந்த கட்டுரை, படம், இவைகளைக் கண்டு மக்கள் கொண்டிடும் எண்ணத்தைப் போக்கிடவும் மாற்றிடவும், வக்கு வழியற்றுப் போன நினலக்குக் காங்கிரஸ் பிரச்சார யந்திரம் வந்துவிட்டதைத் தானே காட்டுகிறது கருணாநிதி, மாறன் ஆகியோர் மீது பாதுகாப்புச் சட்டத்தை வீசியிருக்கும் செயல்.

எண்ணிப் பார்த்தாரா, எழுபதாம் ஆண்டுக்கு நடைபோடும் பருவத்தினரான பக்தவத்சலனார்; கருணாநிதியைச் சிறைவைத்திருப்பது பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதுபற்றி!

என்ன குற்றம் செய்தான் அந்தப் பிள்ளை? குற்றமா! இவர்களின் குணத்தை அம்பலப்படுத்தினான். எழுதினான்.

எழுதினால் என்ன? ஆட்சியாளர் குடியா முழுகிவிடும்.

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம்......