பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியவர் முதலமைச்சர் பக்தவத்சலனார் யோசிப்பார் இதுவும் பயன்தரவில்லையே என்பதாக.

இந்த நோக்கத்துடன் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும், தருமபுரி இடைத்தேர்தலில் கழகம் வெற்றிபெற உடனடியாக முனைந்திட வேண்டும்.

கவலையுடன் தம்பி என்னைத் தருமபுரி பற்றிக் கேட்டபோது, நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்திருக்கிறேன், தருமபுரியில் கழகம் நிச்சயம் வெற்றி பெறும் என்று.

அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட அடக்கு முறையால் தாக்கப்பட்டு நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சிறையில், பாஞ்சாலங்குறிச்சிச் சீமையில், அடைக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வெறெதுவும் இருக்க முடியாது.

அடக்கு முறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கி விடவோ, அவர் தம் பாசறையை ஒழித்து விடவோ முடியாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும், அரசாள்வோர், அதிலும் தமது பிடிதளர்ந்து வருவதை உணர்ந்து பீதிகொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள்வோர், உண்மையினை மறந்து விடுகின்றனர்.

சிறைக்கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ, உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப்பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம்பற்றிய எண்ணம், இவைகளைக்கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பிவிடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது, இது பற்றியே ஆன்றோர், சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.