பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

'இதோ வந்துவிட்டேன்' என்று, வந்து கேட்பவர் விவரம் புரியாதவராக இருந்தால், விளக்கம் கொடுத்து அனுப்புவேன்; விஷமத்தனமாகக் கேட்பவராக இருப்பின், “மதியிலி! என்னைப்போய் அழைக்கிறாயே இந்தியைப் பரப்ப உதவும்படி! நான் சொன்னது என்ன? அதைச் செய்து முடித்தாயா? ஓடு! சாஸ்திரியிடம்! இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி அல்ல என்ற உத்திரவு போடச் சொல்லு, ஒரு கோடிக்கு மேல் இந்திக்காகச் செலவிடப் பணம் ஒதுக்கியிருக்கிறார்களே, அந்தப் பணத்தை வேறு ஏதாவது உருப்படியான காரியத்துக்குச் செலவிடச் சொல்லு. அதை எல்லாம் செய்துவிட்டல்லவா என்னிடம் வரவேண்டும். அதைச் செய்யவக்கு வல்லமை இல்லாமல் என்னிடம் வந்து பேசுகிறாயே! போ! போ!” என்று கூறுவேன்.

ஆனால், முதலமைச்சர் தவறாகப் புரிந்துகொண்டு பேசும்போது குடிமகன் இத்தனை கண்டிப்பாகப் பேச முடியுமா! அதனால்தான் என் மனக்கண்முன், எலுமிச்சம் பழம் கண்டு எரிச்சல் கொண்ட பெரிய மனிதர், சுளையைக் கீழே போட்டுவிட்டுத் தோலைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆடிடும் சிறுவன், ஊமைப் பெண்ணைப் பேச வைக்க ஒத்துக்கொண்டு அதைச் செய்து முடிக்காமல், இந்தப் பெண்ணைப் பாடச் செய் என்று கேட்ட அப்பாவி ஆகியோர் தெரிந்தனர்.

நானாகவா இட்டுக்கட்டிச் சொல்கிறேன், பத்திரிகையில் வந்ததைச் சொல்கிறேன் என்று வாதாடிக் காட்ட நினைப்பார்கள்.

பத்திரிகை நிருபர்கள் மாநாட்டிலே கூறப்படுபவைகளை இன்னின்ன விதமாக நீங்கள் சொன்னீர்கள், இன்ன விதமாக நாங்கள் வெளியிடுவதாக இருக்கிறோம் நீங்கள் இப்படித்தானே சொன்னீர்கள் என்று நம்மிடம் காட்டி, ஒப்பம் பெற்றுக்கொண்டு, இதழ்களில் வெளியிடும் வழக்கம் இல்லை, குறித்துக்கொண்டு போகிறார்கள். வெளியிடுகிறார்கள்; வெளியிடுவதற்கு மறுப்பு நாம் அளித்தால்கூட பல வேளைகளிலே மறுப்பை வெளியிடுவதுமில்லை; வெளியிடும்போதுகூட, பளிச்சிட்டுக் காட்டுவதில்லை. இது இன்று உள்ள முறை.

இந்த நிலையில், எனக்கு அல்ல, முதலமைச்சர் போன்ற பெரிய நிலையினருக்கே, அவர்கள் எதிர்பார்க்-