பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மாணவர்களைச் சந்திக்க முதலமைச்சர் மறுக்கிறார் என்று இதழ்கள் வெளியிட்டன. இவர் அதனை அப்போது மறுக்கவுமில்லை. இப்போது, நான் அவ்விதம் சொல்லவில்லையே என்றார், நாடு கேட்டுக்கொண்டது. அன்று வெளிவந்த இதழ்களைத் தூக்கிக்கொண்டு போய் இவர் எதிரில்போட்டு, ‘இதற்கென்ன சொல்கிறீர்? இதற்கு என்ன பொருள்?’ என்றா கேட்பது?

நான் அப்படிக்கூட அல்ல. என் பேச்சின் மொத்தத்தை, ஏன் அதுபோல் பேசினேன் என்பதற்கான காரணத்தை, என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பேசுங்கள் என்று சொல்கிறேன்; அந்த அளவு கண்ணியம் கூடவா காட்டக்கூடாது?

ராஜ்யசபைப் பேச்சு, பத்திரிகை நிருபர்களிடம் பேசியது என்ற இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொண்டு, குழம்பிப்போய், குழப்பமாக இருக்கிறதே என்று பேசுகிறார் முதலமைச்சர். அவராகக் குழப்பத்தைத் தேடிக் கொண்டால் யார் என்ன செய்ய முடியும்? காலம் தெளிவளிக்கட்டும் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

இதுபற்றி நான் எண்ணிக் கொண்டிருந்தபோதுதான் என் மனக்கண் முன் விந்தைமாந்தர்கள் தெரிந்தனர், உனக்கும் தெரிவித்தேன்.


11-4-65

அண்ணன்,
அண்ணாதுரை