பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

திருவண்ணாமலையையும், சென்னை மாநகராட்சி மன்றத்தேர்தலில் மண் கவ்வியதையும் மறத்துவிட்டார்களோ என்றும், பேசிடும் பொது மக்கள் உளர். ஆனால், நான் அவர்களைப்போலக் காங்கிரஸ் தலைவர்களின் ஆர்ப்பரிப்பைக் கண்டிக்கவோ, திருச்செங்கோடு திருவண்ணாமலையைக் கொண்டு தருமபுரியை மறைக்கவோ போவதில்லை. தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்—காரணம் பல காட்டி இது உண்மையில் தோல்வி அல்ல என்று வாதாடப் போவதில்லை; தோல்வி கண்டோம் என்பதனை ஒப்புக்கொள்ளத் தயங்கப் போவதில்லை. கேரளத்தில் கண்ட தோல்வியை மறைத்திடப் புள்ளி விவரக் கணக்குத் திரைக்குப் பின்னே ஒளிந்து கொண்ட காமராஜர் போல, தருமபுரியில் முன்பு பெற்றதைவிட அதிக வாக்குகள் கழகம் பெற்றிருக்கிறது என்று கணக்குக் காட்டிடும் தந்திரத்தையும் மேற்கொள்ள முற்படவில்லை. ஆமாம்! தோற்று விட்டோம்! தோற்கடிக்கப்பட்டோம்! என்பதனைக் கூறிட அச்சம், தயக்கம் கொள்ளவில்லை; தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

தோல்வியை ஒப்புக்கொள்வதுமட்டுமல்ல; அந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி, காங்கிரஸ் தலைவர்கள் பேசிடும் இழிமொழிகள், எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சுகள், ஒழித்தே விடுவோம் என்ற மிரட்டல்கள் ஆகியவற்றை வரவேற்கிறேன்.

நான், எனது கழகத் தோழர்களின் கண்முன்பும் பொதுமக்களுடைய கண்முன்பும். தோற்கடிக்கப்பட்ட கோலத்திலேயே நிற்க விரும்புகிறேன்—அவர்கள் காண—காண்பதனால் பெறவேண்டிய கருத்துக்களைப் பெற்றிட!

வளைந்த வாள்! நொறுங்கிய கேடயம்! பிய்த்தெறியப்பட்ட கவசம்! குருதி கசிந்திடும் வடுக்கள்!—இவைகளைப் பட்டுப் பீதாம்பரத்தாலோ, இரவல் மினுக்காலோ மறைத்துக்கொண்டு, என் தோழர்களின் முன்பு போலியான ஒரு காட்சிப் பொருளாக நிற்கப் போவதில்லை; தருமபுரியில் காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டவன் என்ற நிலையை மறைத்துக்கொள்ளாமல் நிற்க விரும்புகிறேன்;