பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அவன் விவரமறியாத குற்றவாளி! காங்கிரஸ் தலைவர்கள் எல்லாத் திறமையும் பெற்றவர்களாயிற்றே. ஆகவே, குளறிக் கொட்டவில்லை, தீர்ப்புப் பிரமாதம் என்று பேசித் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

தருமபுரியில் மட்டுமல்ல, எத்தனையோ இடங்களில் எத்தனையோ தடவைகளில், எத்தனையோ விவரமறிந்தவர்கள்கூட மெய்போன்ற பொய்யை ஆதாரமாகக் கொண்டு தவறான தீர்ப்பு அளித்து விடுவதுண்டு.

கள்வனைக் கொண்டுவா! என்ற கூறவேண்டிய மாமன்னன் கள்வனைக் கொன்று வா!

என்று கூறியபோது, மன்னன் தீர்ப்பு-நீதிநெறி வழுவாத மன்னன் தீர்ப்பு—செங்கோல் வளையாச் சிறப்புடையான் தந்த தீர்ப்பு என்றுதான் அவையோர் கருதினர். கோவலனைக் கொடுமைக்கு இரையாக்கிய கெடுமதியாளன், “இஃதன்றோ நல்ல தீர்ப்பு” என்றுதான் பெருமிதத்துடன் கூறியிருப்பான்.

உண்மையான தீர்ப்பு பிறகல்லவா கிடைத்தது, ஒற்றைச் சிலம்பேந்திய கண்ணகி சிலம்பினை உடைத்து உள்ளே உள்ள பரல்களைக் காட்டி, தன் கணவன் குற்றமற்றவன் என்பதனை மெய்ப்பித்தபோது!

எனவே, திருவண்ணாமலையையும் திருச்செங்கோட்டையும், சென்னை மாநகரையும் தீர்ப்பளிக்கும் தகுதி பெற்ற இடங்களல்ல என்று கருதிக்கொண்டு, தருமபுரி மட்டுமே தீர்ப்பளிக்கும் இடம் என்று காங்கிரசார் கூறினாலும்—அது சொத்தை வாதம்—அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதான் என்றோ, முடிவானதுதான் என்றோ கூறி விடுவது எங்ஙனம் பொருந்தும்?

தரப்பட்ட ஆதாரங்களைக் கொண்டும், காட்டப்பட்ட சான்றுகளை நம்பியும், எடுத்துக் கூறப்பட்ட வாதங்களைக்கொண்டும், தரும்புரி மக்கள் அந்த விதமான தீர்ப்பு அளித்துவிட்டனர்.

இதனாலே நான் தருமபுரி மக்கள் மீது குற்றம் கூறவில்லை; அவர்களின் நேர்மையையும் திறமையையும் சந்தேகிக்கவில்லை; நான் கூறிக்கொள்வது, நாம், வழக்கை எடுத்துரைத்ததிலும், சான்றுகளை விளக்கியதிலும்