பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

குற்றத்தை மெய்ப்பித்துக் காட்ட வாதாடியதிலும், தேவைப்படும் அளவு திறமையைக் காட்டாததால் வழக்கின் வடிவம் கெட்டுவிட்டது; தீர்ப்பு வேறுவிதமாகி விட்டது என்றுதான் கருதுகிறேன்.

நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டுமேயன்றி, தருமபுரி மக்கள் மீது வருத்தப்பட்டுக் கொள்வது முறையாகாது.

நியாயம் காங்கிரசின் பக்கம் இருந்ததாலும் அல்ல; நீதிபதிகள் தவறான போக்கினர் என்பதாலும் அல்ல; வழக்கை எடுத்துரைப்பதில் நாம் வெற்றி பெறாததாலேயே தீர்ப்பு காங்கிரசுக்குச் சாதகமானதாகத் தரப்பட்டுவிட்டது.

இது தோல்வியை மறைத்திடக் கூறப்படும் தத்துவம் அல்ல; நான் தோல்வியை ஒத்துக்கொண்ட பிறகே இதனைக் கூறுகிறேன்; உண்மை நிலைமையினை உவகைக் கூத்தாடும் காங்கிரஸ் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்குக்கூட அல்ல; நமக்கே உண்மை நிலைமை புரியவேண்டும் என்பதற்காக.

பிரச்சாரத்தில் திறமை மிக்கவர்களாயிற்றே, நீங்களா போதுமான முறையிலே வழக்கை எடுத்துரைக்கத் தவறிவிடுவீர்கள்! என்று நையாண்டி செய்வார்கள்; உணருகிறேன். நான் கூறுவது, நமது பிரசார முறை செம்மையாக இல்லை என்பது அல்ல; வழக்கு மிக எளிதானது; சிக்கலற்றது; இதனை விளக்க நாம் அதிகமான முயற்சி எடுக்கத் தேவையில்லை, குற்றம் புரிந்துவிட்டது காங்கிரஸ் கட்சி என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும், ஆகவே, தண்டிக்க முற்படுவர் என்ற நம்பிக்கையை, அளவு கடந்த முறையிலே வைத்துக்கொண்டு தீர்ப்பு நிச்சயமாக நமது பக்கம் தான், இதிலென்ன சந்தேகம், என்ற முனைப்புடன் தருமபுரி சென்றோம். அதைக் கூறுகிறேன்.

அச்சத்தோடு வந்தவர்கள், குற்றத்தை மறைத்திடத் திறமைகாட்டினர், தமக்கு ஆதரவான தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

அ.க. 2—5