பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

மக்களில், அரசியல் பிரச்சினைகளை அறிந்தவர்கள், இந்த அரசின் இயல்பினைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; அதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

ஆனால், அரசியல் பிரச்சினைகளைத் தாமே நேரடியாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பவர்கள் என்று ஒரு பகுதி, மற்றவர் கூறிடும் முடிவினை ஏற்றுக்கொள்ளும் ஒரு பகுதி என்ற முறையில் தான் சமூகம் இருக்கிறது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

மக்களாட்சி முறையின் மாண்பினை நன்கு உணர்ந்துள்ள நாடுகளில், தாமாகவே அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து தக்க முடிவினை மேற்கொள்வோரின் அளவு அதிகம், இங்கு இருப்பதைக் காட்டிலும்.

எனவேதான், இங்கு உண்மைக்காகப் பரிந்துரைக்கும் பணியிலே மும்முரமாக ஈடுபட்டாக வேண்டி இருக்கிறது.

இந்தப் பணி எந்த அளவுக்குத் தேவை என்பதை மறந்த நிலையில் தருமபுரி சென்றோம்; விளைவு நமக்கு வேதனை தந்துவிட்டது.

இந்த அரசு நடாத்திய அடக்குமுறை பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும் கடமையைக் காட்டிலும், இவருக்கா அவருக்கா ஓட்டு என்ற முறையிலேயும், இன்னின்னார். சொல்கிறார்கள் என்பதற்கா, அவர்களெல்லாம் சொல்கிறார்கள் என்பதற்கா? எதற்கு நாம் கட்டுப்படுவது என்ற முறையிலும், தருமபுரி மக்கள் இந்தத் தேர்தலைக் கவனித்தார்கள்.

சுட்டு வீழ்த்தப்பட்டவர்களிடம் இரக்கமற்றவர்களாக, இழப்புக்கு ஆளானவர்களின் வேதனையைத் துடைக்கவேண்டும் என்ற எண்ணமற்றவர்களாக, தருமபுரி மக்கள் இருந்திருக்க முடியாது—எவரும் அவ்விதமானவர்களாக இருந்திட மாட்டார்கள்.

ஆனால், அந்தக் கருத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு இந்தத் தேர்தல் என்ற எண்ணத்தைவிட வேறு பலவிதமான எண்ணங்களை அவர்கள் கொண்டுவிட்டனர் என்றே தோன்றுகிறது. நாமோ இதயமுள்ளவர்கள் எவரும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த ஒரு ஆட்சியை நடத்திவரும் கட்சியை ஆதரிக்கமாட்டார்கள் என்ற