பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தேர்தல்-தருமபுரி தலைநகராக வேண்டுமா வேண்டாமா? தலைநகர் வேண்டும் என்றால், காங்கிரஸ் வெற்றி பெற்றாக வேண்டும், அதற்காகத்தான் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதுதான்.

இந்தி ஆட்சி மொழியாவதைக் கண்டிக்கிறோம், அடக்கு முறையைக் கண்டிக்கிறோம். ஆனால், அதே போது தருமபுரி தலைநகராக வேண்டும் என்றும் விரும்புகிறோம், அதற்காகவே காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகிறோம் என்ன எண்ணத்துடன், தருமபுரியின் குறிப்பிடத்தக்க புள்ளிகள் முனைந்து நின்று பணியாற்றினர். காங்கிரசின் வெற்றிக்கு அது மிக நல்லவாய்ப்பாக அமைந்தது.

மறுப்பார்கள் காங்கிரஸ் கட்சியினர்; எனினும், நான் மனதார நம்புவதை. எனக்கு அறிவிக்கப்பட்டதை நான் சொல்லுகிறேன்: காங்கிரசுக்கு எதிராகப் பணியாற்ற முனைபவர்கள், பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப் படுவார்கள் என்ற திண்ணைப் பேச்சு, தருமபுரித் தொகுதியில் மிக வேகமாகப் பரவிற்று.

அமைச்சர்களோ, தரமுள்ள தலைவர்களோ இந்தத் தவறான பிரசாரம் செய்தார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுத்திரட்டச் சென்ற பணியாளர்கள், அதிக அளவில் அரசியல் தெளிவில்லாதாரிடம் இந்த அச்சம் எழச்செய்து விட்டிருந்தனர் என்று அறிகிறேன்.

கருணாநிதியைப் பார்க்கிறீர்களல்லவா? வழக்குக் கூடப் போடாமல் உள்ளே பிடித்து அடைத்து விட்டார்கள், பாதுகாப்புச் சட்டப்படி!

என்று பேசி, பலருக்கு, உண்மைதானே! ஒரு பெரிய கட்சியின் பொருளாளருக்கே இந்தக் கதி என்றால், நாம் காங்கிரசை எதிர்த்தால், என்னதான் செய்ய மாட்டார்கள்! நமக்கேன் வீண் வம்பு! காங்கிரசுக்கே வேலை செய்வோம்! என்ற எண்ணம் எழுந்தது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அடக்குமுறை கண்டு அருவருப்பும் ஆத்திரமும் எழுவது போலவே, சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு அச்சம் ஏற்பட்டுவிடுவது இயற்கை,