பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

இந்த அச்சம் காரணமாகப் பலர் காங்கிரசுக்கு ஓட்டுத் திரட்டும் வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றைக் கூறும் நான், ஆகவே, தருமபுரியில் நாம் தோற்றது வியப்பல்ல என்று வாதாடவில்லை; இந்த நிலைமைகளை மீறி நாம் பணிபுரிந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். கழகத்தின் பணி, சூது சூழ்ச்சிகளை முறியடிக்கத் தக்கதானதாக வலிவு பெற்றாக வேண்டும். தருமபுரித் தோல்வி இந்தப் பாடத்தைத்தான் நமக்கு அளிக்க வேண்டும்.

தம்பி! மகனை இழந்த மாதா மனம் நொந்து கதறிக்கிடக்கிறாள். கணவனை இழந்த காரிகை கண்ணீர் வடிக்கிறாள்; அண்ணனை இழந்த தம்பி புரண்டு அழுகிறான்! இத்தனைக்கும் காரணமான அடக்கு முறையை அவிழ்த்துவிட்ட ஆட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள கட்சி தேர்தலிலே வெற்றி பெறுகிறது என்றால் இது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போன்றதல்லவா, இது நடந்துவிட்டதே தருமபுரியில்!!

“சுட்டோம், சுடுவோம்!” என்று ஆட்சியினர் ஆர்ப்பரித்தாலும் வியப்பில்லையே!

சுட்டோம், ஓட்டளித்தனர் என்று வாதாடிடவும் முனைவரே வன்கணாளர்கள். எதை எதையோ எண்ணிக் கொண்டு, தருமபுரி மக்கள் நடந்து கொண்ட போக்கு, ஆட்சியாளர்களுக்கு, நாம் எப்படியும் நடக்கலாம், எதையும் செய்யலாம், எத்தனை முறையும் சுடலாம், எத்தனை பிணமும் விழலாம், யார் என்ன கேட்க முடியும் என்ற எண்ணத்தை அல்லவா உண்டாக்கி விடும். தோற்றது கழகமா! இல்லையே! அடக்கு முறைக்கு ஆளான மக்களின் இதயக் குமுறலை அல்லவா, இந்தத் தேர்தல் தோல்வி, பொருளற்றதாக்கி விட்டது. நல்லாட்சிக்கான முயற்சிக்கல்லவா பலமான அடி விழுந்து விட்டது!

வீழ்ந்துபட்ட மக்களின் சார்பில் நின்றோம், நம்மை வீழ்த்தி விட்டார்கள். வேதனைப்பட்டவர்களின் துயர்துடைக்க முனைந்தோம். தோற்கடித்து விட்டார்கள். இந்தத் தோல்வி, விழிப்புற்ற தமிழர்களுக்கன்றோ பெருந்தோல்வி என்றாகி விட்டது. தேம்பித் தவித்திடும்