பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் சீறி எழுவார்கள்; ஆசைக்கு ஆட்பட்டு அநியாயத்துக்குத் துணைபோனவர்களும் தமது தவற்றினை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்பார்கள்; அஃது காங்கிரசாட்சியை வீழ்த்தும் வலிவை மக்களுக்கு அளித்திடும்.

அந்த நம்பிக்கையுடன் கழகம் பணியாற்றிவரும்; தருமபுரித் தோல்வி அந்தப் பணியின் தரத்தையும் வேகத்தையும் அதிகமாக்கிவிடுமேயன்றித் துவண்டிடச் செய்யாது என்பதனையும் நான் மறந்திடவில்லை.

என்ன கொடுமை செய்தாலும் நமக்குத்தான் ‘ஓட்டு’ என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்குத் தடித்து விடச் செய்கிறது தருமபுரி.

நமக்கோ, உன் வலிவு போதாது, வளர வேண்டும்; முறை செம்மைப் படுத்தப்பட வேண்டும்; முயற்சியில் புதுமுறுக்கு ஏற வேண்டும், உண்மைக்காகப் பரிந்து பேசினால் மட்டும் போதாது, உண்மை வெற்றிபெறத் தக்கவிதமான வலிவு உண்மைக்குக் கிடைத்திட வழி கண்டாக வேண்டும் என்ற பாடத்தைத் தருகிறது.

வெற்றி எந்த நேரத்தில் எந்தக் கட்சிக்குக் கிட்டுகிறதோ, அந்தக் கட்சியை வலிவுள்ள கட்சி என்று எண்ணிக்கொள்வதும், வலிவு இருக்கிற காரணத்தாலேயே அது நியாயமான கட்சி என்று எண்ணிக் கொள்வதும் கூர்த்தமதி படைத்தோரின் போக்கல்ல; தெளிவற்றோர் பெற்றிடும் மன மயக்கம்.

கழகம் நடாத்துவோர், வலிவுள்ள கட்சியில் தஞ்சம் புகுந்து தகத்தகாயம் பெற முனைந்தவர்கள் அல்ல; சாதாரணக் கட்சியை வலிவுள்ளதாக்கியவர்கள்! ஒளி உள்ள இடம் ஓடி வெளிச்சம் போட்டுக் கொண்டவர்கள் அல்ல, கழகத்தினர்; இருண்ட இடத்தில் ஒளி எழத் திருவிளக்கு ஏற்றிவைத்தவர்கள்; எங்கே சென்றால் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று அலைந்து அதற்கோர் இடம் கண்டுபிடித்தவர்களல்ல, தேர்தலில் வெற்றி கிடைக்கத்தக்க வலிவினை உழைத்துப் பெற்றிடும் உறுதிகொண்டு பணிபுரிவோர். கழகத் தோழர்கள் விளைந்த காட்டுக்குருவிகளுமல்ல, மரம் பழுத்தது கண்டு பறந்தோடி வரும் வெளவாலும் அல்ல, அரைக்க அரைக்க மணம் எழும்பும் சந்தனம் போன்ற இயல்பினர். தருமபுரித்