பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உலகு இறுதியில் அந்தக் கொடுமையினை ஒழித்துக் கட்டியது என்பதனைக் காட்டிடுவது வரலாற்றுச் சுவடி. இதனை மறந்து தேர்தல் களத்திலே பெற்றுவிட்ட ஒரு வெற்றியைக் கண்டு காங்கிரசின் தலைவர்கள் எமக்கு இனி எவரே இணை! எவர் இனி எம்மை என்ன செய்திட முடியும்! என்றெல்லாம் இறுமாந்து பேசுகின்றனர்.

அதுகேட்டு நமது தோழர்கள் கோபித்து ஆகப் போவது ஒன்றுமில்லை.

வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சி பேசுவதில், ஆணவம் நெளிகிறது; உண்மை. ஆனால், அந்தப் பேச்சைக் கேட்டுக்கொள்வது, கழகத்துக்கு நன்மையே செய்திடும் என்று நான் நம்புகிறேன். எனவே, வெற்றிவெறியிலே அவர்கள் பேசுவதை வரவேற்கிறேன்,

தோல்வியால் துயரமும், வெற்றி வெறியாளரின் பேச்சால் கோபம் கலந்த வேதனையும் கழகத் தோழர்களிடம் மூண்டிட மூண்டிட, அவர்கள் தமது முறைகளைக் செம்மைப்படுத்திக்கொள்ள முனைவர் என்பது என் எண்ணம். நான் கடிந்துரைப்பதன் மூலம் நடைபெறக்கூடியதைக் காங்கிரசின் வெற்றி வெறிப் பேச்சினர், நடத்திக் கொடுக்கிறார்கள். கடிந்துரைத்திடும் இயல்பும் எனக்கு இல்லை.

தேர்தல் களத்திலே ஏற்பட்டுவிடும் ஒரு தோல்வி நம்மைச் செயலற்றவர்களாக்கிவிடாது என்பதனை நான் அறிவேன், நானே தேர்தலிலே தோற்கடிக்கப்பட்டவன்.

தோல்வி, துடைக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி விடும் என்று கவலை கொள்பவனுமல்ல; வெற்றி அதனைப் பெற்றவர்களுக்கு, என்றென்றும் ஒளிவீசும் புகழாரம் சூட்டிவிடாது என்பதனையும் அறிந்திருக்கிறேன்.

போட்ட புள்ளிகள் பொய்த்துப்போவதும், தீட்டிய முறைகள் கெட்டுப்போவதும், எதிர்பார்த்தவைகள் நடைபெறாமல் போய்விடுவதும், நாம் இதற்கு முன்பு காணாததுமல்ல; ஒவ்வொரு தனி மனிதரும் சரி; கட்சியும் சரி, இத்தகைய நிலையினைக் கண்டதுண்டு; அறிவோம்.

மோப்பம் பிடிப்பதிலும், பதுங்கிப் பாய்வதிலும், பாய்ந்து பற்றுவதிலும், பற்றுவதைப் பிய்த்து எறிவதி-