பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

லும் காட்டிலே புலிக்கு உள்ள திறமை, நாட்டிலே தேர்தல் களத்திலே காமராஜருக்கு உண்டு என்று பேசாதார் இல்லை, புகழாதார் இல்லை.

எனினும். திருவண்ணாமலையிலும் திருச்செங்கோட்டிலும், மாநகராட்சி மன்றத் தேர்தலிலும், கேரளத்திலும் காமராஜரின் கணக்குச் சரியில்லை, வாக்குப் பலிக்கவில்லை, முயற்சி வெற்றி பெறவில்லை; அதனால் அவருடைய மூக்கு அறுபடவில்லை, முகாம் கலைக்கப்படவில்லை, முடுக்குக்கூடக் குறையவில்லை!

ஐயாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிக்கொடி நாட்டுவோம் என்று பிரகடனம் செய்தவர்தான் காமராஜர் திருவண்ணாமலைத் தேர்தலின் போது!!

மாநகராட்சி மன்றத் தேர்தலை முடித்துக்கொண்டு டில்லி புறப்பட்ட காமராஜர், ஹைதராபாத்திலே, நிருபர்களிடம், தொலைந்தது கழகம்! வென்றது காங்கிரஸ்! கார்ப்பரேஷனைக் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது! என்று அறிவித்தார்.

நினைத்தது நடக்கவில்லை; நடந்துவிட்டது கண்டு அவருடைய நினைப்புத் தளரவில்லை, நிலை தடுமாறவில்லை; பேச்சிலேகூட ஒரு அச்சம், ஆயாசம் எழவில்லை.

அதனை நான் எடுத்துக்காட்டுவது அவரைக் கேலி செய்ய அல்ல,

வெற்றியை எதிர்பார்த்து, அதற்காகப் பாடுபட்டு, நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பி, தோல்வியைக் கண்டால், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான கருத்தினைக் கழகத் தோழர்கள் பெறவேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறினேன்.

சில காலமாக நமக்கு ஓர் எண்ணம் வளர்ந்துவிட்டிருக்கிறது; நம்முடைய முயற்சி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற எண்ணம்,

காரணமற்றதுமல்ல அந்த நம்பிக்கை.

நாம் மேற்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதால், அந்த முயற்சி வெல்லும் என்று கருதுவதும்,