பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் பேராதரவு இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் நிரம்பத் தெரிவதால், வெற்றி கிடைத்திடும் என்று கருதுவதும் தவறு அல்ல.

ஆனால், நம்முடைய முயற்சி நியாயமானது என்பதை எடுத்து விளக்கும் செயலிலும்,

நம்முடைய முயற்சிக்குப் பேராதரவு அளித்திடும் விருப்பம் கொண்டுள்ள மக்கள் முழுத்திறமையுடன் நமக்குத் துணை நின்றிடச் செய்திடும் செயலிலும், நாம் பெறவேண்டிய வெற்றியைப் பெற்றோமில்லை.

மற்றொன்று, நாம் காங்கிரசுக்கு உள்ள ‘தேர்தல் யந்திரத்தின்’ அளவு, தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இவைப் பற்றிய கணக்கிலேயும் தவறு செய்கிறோம்.

காங்கிரஸ், தனது தூய காந்தீயக் கொள்கையை இழந்துவிட்டது; ஆகவே, அதற்குக் காந்தியார் காலத்தில் இருந்துவந்த மதிப்பு இப்போது மங்கிவிட்டது.

ஆகவே, காங்கிரசின் செல்வாக்குச் சிதைந்துவிட்டது என்பது நமது கருத்து.

இந்தக் கருத்தினைக் கொண்டோர், வேறு பலரும் உளர். இந்தக் கருத்து தவறானதுமல்ல; உண்மை; மறுக்க முடியாதது.

கொள்கைக் கூடமாகக் காங்கிரஸ் இல்லை, கொள்கையாளர் அதிகம்பேர் அங்கு இல்லை என்பது உண்மை. அதனால் மதிப்பு மங்கிவிட்டது என்பது உண்மை; ஆனால், ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால், தம்பி! கொள்கையை இழந்துவிட்ட பிறகு காங்கிரசுக்குத் தூய்மையான அமைப்பு என்ற செல்வாக்கு இல்லை என்றாலும், தேர்தலில் ஈடுபட்டு வெற்றி ஈட்டத்தக்க கட்சி என்ற வலிவு வளர்ந்திருக்கிறது.

கொள்கையை இழந்துவிட்டது காங்கிரஸ், எனவே, அதனுடைய வீழ்ச்சி நிச்சயம் என்பது பொதுவான உண்மை என்றபோதிலும், கொள்கைச் சிறப்புடன் காங்கிரஸ் இருந்தவந்தபோது, அதனுடன் நெருங்க முடியாத நிலையினில் இருந்துவந்த பலர், கொள்கையைக் காங்கிரஸ் இழந்துவிட்ட பிறகு, அச்சமற்று அதிலே சேர்ந்துகொள்ள முன்வந்தனர்.