பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

“என்ன செய்வது, கடன் கொடுத்தவன், கழுத்தின் மீது கத்தியை நீட்டுகிறான்; இந்தத் தேர்தலில் அவன் பக்கம் நான் இருந்தால் தான், தலை தப்ப முடியும்,”

“என்னவோ என் கஷ்டம் போக ஏதாவது வழி கிடைக்காதா என்று பார்க்கிறேன். கொள்கை கோட்பாடு என்று பேசிக் கொண்டிருந்தால், என் குடும்பத்தைக் கவனிக்க வேண்டுமே! பெரிய மனிதர் வாக்குக் கொடுத்திருக்கிறார், உதவி செய்வதாக. அதனால்தான் அந்தப் பக்கம் இருக்கிறேன்.”

“நம்ம சம்பந்திக்கு வேண்டியவராம். நான் அவர் பேச்சைத்தட்டி நடக்க முடியுமா?”,

“என் மானம் சொத்து எல்லாம் இந்த வழக்கிலே நான் வெற்றி பெறுவதைப் பொறுத்து இருக்கிறது. இதற்கு முக்கியமான சாட்சி ஒருவர். அவர் வந்து சொல்கிறார்.

இன்னாருக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று. எப்படி நான் மீற முடியும்.

இவ்விதம் பேசுபவர்களையும், தம்பி! தேர்தலின்போது காணலாம்.

தேர்தலின் போது அனைவருமே இதயத்தின் கட்டளைப்படி நடந்து கொள்வார்கள் என்று எண்ணி விட முடியாது. கட்டளை, கனிவுரை, எச்சரிக்கை, வரம், வாக்குறுதி, மிரட்டல் எனும் பல்வேறு வகையின கிளம்பும், பல்வேறு முனைகளிலிருந்து.

“பார்ப்போமே, பயல் என்னை மீறி நடக்கிறானா என்பதை”

“கண்டிப்பாகச் சொல்லிவிடு! இதிலே என் சொல்லை மீறி அவன் நடந்தால், பிறகு எவ்விதமான பந்தமும் பாசமும் எனக்குக் கிடையாது என்பதை.”