11
ஐயயோ! என்று அணங்கு அலறுகிறாள், அந்தோ ! கொடுமை! கொடுமை! என்று கூவுகிறான் இளைஞன்.
பெரு நெருப்பிலே பெண்ணை இறக்கினர். புத்தாடை உடுத்திக் கொண்டாள் பூவை—மஞ்சள் குங்குமம் இட்டுக் கொண்டு, மாங்கலியத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டு, மாமி மாமன் காலில் விழுந்து வணங்கிவிட்டு, சூழ நின்ற சுற்றத்தாரைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கும் பிட்டுவிட்டுப், பிணக்குழியைப் பற்றிக் கொண்ட பெரு நெருப்பை மும்முறை வலம்வந்து, —“ஈசா ! இதோ நானும் என் நாதனுடன் வருகிறேன், ஏற்றுக்கொள். பதியை இழந்து பாவை புவியில் வாழ்வது பெரும் பாபம், எனவே இதோ, உடன்கட்டை ஏறுகிறேன், உன் திருவடியில் சேர்த்துக் கொள்!” என்று பிரார்த்தனை செய்கிறாள்.
“உத்தமி உடன் கட்டை ஏறுகிறாள், பத்தினி, பர்த்தாவுடன் செல்கிறாள்—அவளுடைய பாததூளி பட்டாலே பாபம் சம்ஹரிக்கப்படும், உடன் கட்டை ஏறிடும் காட்சியைக் கண்டோருக்குக் கர்மம் கழுவப்படும்; கடவுளருள் கிட்டும்” என்று பயபக்தியுடன் பேசுகின்றனர்.
பத்தினிப் பொண்ணு
பாரதக்கண்ணு
என்று பாடுகிறார்கள்; தாளம் கொட்டுகிறார்கள்.
தீயின் அருகே செல்லச் செல்ல, அவள் கண்களிலே ஓர் மிரட்சி ஏற்படுகிறது; வாலிபனுக்கு அது விளங்குகிறது.
“ஜெய்மகாதேவ்! ஜெய் சங்கர்! ஜெய் சீதாராம்!” என்று கோஷம் கிளம்புகிறது.
ஆயிரம் நாவுகள் படைத்த கோர உருவம்போல, நெருப்புத் தெரிகிறது, பெண்மணியின் கண்களுக்கு! எனினும் அவள் அருகே செல்கிறாள்.
மகளே ! அருமை மகளே ! என்று தாய், அழுது என்ன பயன் ? அவள் உத்தமி பத்தினி, எனவே அவள் சுட்டுச் சாம்பலாக்கப்பட வேண்டியவள் ! இளம் பெண், இந்த வயதிலா இந்தக் கதி என்று சிலர் பச்சாதாபப்படலாம். ஆயினுமென்ன, அவள் பாரதப் பெண் — பதி பிணமானான், அவன் உடல் அதோ நெருப்பில், இவள் இனி பூவுலகில் இருப்பானேன். உயிருடன் இருந்தபோது யாருடன் மஞ்சம் ஏறி கொஞ்சிக் கிடந்தாளோ அவனுடன்தான் இப்போதும் இருக்கவேண்டும். அதுதான் பாரதப் பண்பாடு. போ, மகளே, போ, நாதன் இருக்குமிடத்துக்குத்தான் நாயகி செல்லவேண்டும். அது மலர் தூவிய பஞ்சணையானாலும் சரி, கொழுந்து விட்டெரியும் நெருப்பானாலும் சரி, அதுதான் உன் இடம்; போடி பெண்ணே,