27
வான், ஆனால் எம்முறையில் பாடுபட்டால் பலன் மிகுதியும் காணமுடியும் என்ற பக்குவம் அறியான், கூர்வாள் போன்றான், திறம்பட உபயோகிக்கும் ஆற்றலை ஆண்டவன் சீமான்களிடம் மட்டுமே ஒப்படைத்து அருளினார், எனவே அந்தச் சீமான்கள் காட்டும் வழி நடந்தால்தான் ஏழையின் உழைப்புக்கே உயிரூட்டம் ஏற்படும், பெரும்போரிலே மாள ஏழையால் முடியும், ஆனால் பேரரசைக் கட்டியாள அவன் தகுதி பெற்றிடவில்லை, தயாபரன் அந்தத் தகுதியைத் தனவந்தர்களுக்குத் தான் தந்திருக்கிறார், என்று ஜெபமாலையினர், தூப தீபநைவேத்தியத்தின் துணைகொண்டு உபதேசம் செய்தனரே, அது புரட்டரின் பொய்யுரை என்பதைப் புவியறியச் செய்த புரட்சி வீரர்கள் வருகிறார்கள்—அவர்கள் ஆட்சி நடத்தும் நாட்டினிலே, வளமுள்ள வயல் இருக்கிறது, இங்கு போல—ஆனால், அவை மக்களின் உடைமை—தொழிற்சாலைகள் உள்ளன—அவை தம்மை உடைமையாகக் கொண்ட டாட்டாக்கள் இல்லை — உல்லாசக் கூடங்களிலே மானே ! மயிலோ! அன்னமோ ! அழகு நிலவோ ! என்று வியக்கத்தக்க விதத்தில் அணங்குகள் உளர். ஆனால், அவர்கள் சீமான்களின் சிற்றின்பக் கருவிகளாக இல்லை, நாட்டுக் கலைக் கருவூலக் காவலர்களாக உள்ளனர்—நன்மதிப்பைப் பெற்று வாழ்கின்றனர் — என்ற உண்மையை அறியும்போது, இங்கு மட்டுமல்ல, எந்த நாட்டிலும் உள்ள மக்களின் மனதிலே ஆர்வம் அன்பாகப் பொங்கி வழியத்தான் செய்யும். “அதைத்தான், சென்னையும் கோவையும், பம்பாயும் டில்லியும் கல்கத்தாவும் போட்டியிட்டுக்கொண்டு காட்டின. பொற்காலம் பிறந்தது, பொல்லாங்கு மடிந்தது, புரட்டர் ஒழிந்தனர், புல்லர்கள் சாய்ந்தனர்; மக்களுக்கே உடைமை, மக்களுக்கே அரசு என்ற புதுத் திட்டத்தை நிலைநாட்டினர். இஃதோர் வானவில், காற்றினிலே மிதந்துவரும் கீதம், சின்னாட்களிலே மறையும், மடியும்—நாட்டு வளம் குன்றும், ஆட்சி ஆட்டம் கொடுக்கும், வாணிபம் நலியும், தொழில் துவளும், கல்வி கெடும், கலை மடியும், செய்வதெதுவெனத் தெரியாது, புயலில் சிக்கிய சிறார் போலாவர் தலைவர்கள் என்று கூறினர், சென்றது இனி மீளாது என்பதை ஏற்க மறுத்திடும் உள்ளம் படைத்த உலுத்தர்கள். முப்பதாண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன—முதலாளித்துவ நாடுகள் என்னென்ன வளம் காட்ட முடியும் என்று கூறினவோ, அவையாவும், மும்மடங்கு பெருகிய நிலையில் பொதுவுடைமை நாடு காட்டுகிறது. களிப்பும் கலையும், தொழிலும் தோழமையும் கைகோர்த்துக் கொண்டு நடமிடுகின்றன. வீரமா? உலகு வியக்கத்தக்க அளவில், தியாக உள்ளமா ? கேட்போர் எழுச்சி பெறத்தக்க வகையில்! இந்த நிலை வந்தது, வாரீர் ! காணீர் ! கேளீர் !—என்ற நம்பிக்கையும் உற்சாகமும்