பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

கண்டால், உடனே எத்தனை கோடி பவுன்கள் செலவாகியிருக்கும் — இவ்வளவு செலவிடத்தக்க நிலையில் பொன் பூத்திடும் பூமியாக இருக்கிறது இந்நாடு......... இது நம் ஆதிக்கத்துக்கு உட்பட்டால்............ என்று ஆசை ஊறும் நெஞ்சுடன் நிற்பர்!

பேசும் போதோ, இந்தியாவின் பண்டைப் பெருமையை, கலைத் திறனை, அழகினை நுகரும் அருந்திறனைப் பாராட்டுவர்.

புல்கானின், குருஷேவ் கண்டனர் — அழகொளியுடன் விளங்கிடும் அந்த அற்புதமான கட்டிடங்களைக் கண்டதும், அவர்கள் மனக்கண் முன்பு என்ன காட்சிகள் தெரிந்தன ? இவைகளைக் கட்டுவதற்காக எத்தனை எத்தனை ஏழைகள், அடிமைகள், வேலை வாங்கப் பட்டிருக்க வேண்டும், மக்களின் பொருள் மன்னனிடம் எவ்வளவு மிகுதியாகக் குவிந்திருந்தால், இத்தகைய மணி மாடங்களும் கூடங்களும் கட்டித் தமது கீர்த்தியை நிலைநாட்டிட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணங்களைக் கிளரத் தக்க காட்சிகளே தோன்றின.

பாரிஸ் பட்டினத்துக்காரனின் மனக்கண்ணில் இந்தக் காட்சியா தெரிந்திருக்கும்? ஆஹா! இவ்வளவு ‘ரசிகத் தன்மை’ கொண்ட பாதுஷாவின் அந்தப்புரத்தில் எத்தனை எத்தனை துடியிடை, காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுத் துவண்டதோ, சிரிப்பையும் சிருங்கார ரசத்தையும் சிந்திய சிட்டுகள் எத்தனையோ! சேல் விழியாள் பாதம் வருடிய பாதுஷாவின் கரம் செம்பஞ்சுக் குழம்பினைப் பூசியதால் பெருமைப் பட்டதோ அல்லது ஆலம் ஏற்ற விழிச்சியரின் அதரம் கொண்டிருந்த சிவப்பினை அவர்தம் கண்கள் கொண்டிட, அஃதறிந்து ஆவன செய்ததால், பிறகு அப்பப்பா ! இனி ஆகாது! இது அடுக்காது! என்று எப்படி எப்படி அவள் கொஞ்சு மொழியில் கெஞ்சினளோ, என்னென்ன பானங்களோ, எவ்விதமான பளிங்குக் கிண்ணங்களோ எப்படி எப்படி இன்பம் கண்டனரோ என்று இவ்வகையில் எண்ணம் நெளியத்தக்க வகையான காட்சிகள் தான் தெரிந்திருக்கும்.

ரஷியத் தலைவர்களின் கண்களுக்கோ உழைத்து அலுத்த மக்கள், உப்பரிகையில் உலவிக்கொண்டு உத்தரவுப் பிறப்பித்த பாதுஷாக்கள்—இந்தக் காட்சிதான் தெரிந்தது.

குருஷேவ், இதனைக் கூறியும் விட்டார் !

வல்லரசுகளை நடத்திக்கொண்டு, வஞ்சகத்தைப் புன்னகையாலும் பூச்சாலும் மறைத்திடுவோருக்கு இது பண்பு குறைந்த பேச்சாகத் தென்படும்.

குருஷேவ், மக்களின் சார்பில்தான் பேச வேண்டும், அது மாளிகையின் இலக்கணமல்ல எனினும் பரவாயில்லை !—என்று துணிந்து கூறினர்.