பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

கண்டறியவுமில்லை, அவருடைய கருத்து அவ்வழி செல்லவுமில்லை.

நேரு பண்டிதரும், பிறநாடுகளிலே காணப்படுகிற பெருந்தலைவர்கள் போலவே, நாட்டிலே அணை வேண்டும் தேக்கம் வேண்டும், தொழிற்சாலைகள் வேண்டும் என்பது பற்றியும், தம்மாட்சியிலே இத்தகைய “வெற்றிகள்” உருவெடுக்க வேண்டும் என்பது குறித்துந்தான் எண்ணுகிறாரே தவிர, இவைகள் மக்கள் சார்பிலே நடத்தப்படுகின்றனவா, மக்களின் பொருள் பாழாக்கப்படாமல் இருக்கிறதா, என்பது பற்றிய அக்கரையைச் செலுத்தக் காணோம். அவருக்கு மலைகள் எல்லாம் மலர்த் தோட்டங்களாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதே தவிர, மந்திகள் அங்கு நுழைந்து பாழாக்கா வண்ணம் அரண் அமைக்க வேண்டுமே என்பது பற்றிய, எண்ணம் எழுவதில்லை.

“என் திறமையை மா மன்னா ! கூறிடப் பெருமைப் படுகிறேன். கேட்டிடின் தாங்களே பூரிப்படைவீர்கள்” என்றான் மல்லன்.

மாமன்னன், “கூறு, கேட்டிடுவோம், வீரச் செயல் யாது செய்தனை ?” என்றான்.

“ஒரே அறை — கன்னத்தில், காவலா ! ஒரே ஒரு அறைதான், அதுவும் இலேசாகத்தான்—முப்பத்திரண்டும் பொல பொலவெனக் கீழே உதிர்ந்தன” என்றான் மல்லன்.

“பளா ! பளா ! ஒரே அறையில் 32 பற்களும் உதிர்ந்தனவா? அருமை ! அருமை ! அமைச்சரே ! மல்லன் செய்ததைக் கேட்டீரோ ? தங்கத் தோடா, முத்து மாலை பரிசு அளித்தோம்” என்றான் மாமன்னன்.

அமைச்சர் குறுக்கிட்டு, “அரசர்க்கரசே ! மல்லன் திறம் கண்டு மகிழ்வது சரியே ; பரிசுக்குரியவன் எனத் தாங்கள் உரைத்ததும் மன்னர்க்கழகுதான்; ஆனால், ஒரே அறையினால் எல்லாப் பற்களையும் இழந்தவன் யார் தெரியுமா ?” என்று கேட்டான்.

மாமன்னன், “ஆமாம், ஆமாம், அதை மறந்தேன். யார் அவன் ?” என்றான்.

மல்லன் திகைத்தான்.

அமைச்சன் கூறினான், “மன்னவா! மல்லன், தன் மதிமிக்க மகனுடைய பற்களைத்தான் அங்ஙனம் உதிரச் செய்தான். அவன் குற்றம் ஏதும் செய்யாதவன் குடித்துப் புரளும் தந்தையைக் கண்டித்தான்—கோபத்தால் மல்லன் இக்-