பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கொடுஞ் செயல் புரிந்தான். இதற்கோ பரிசு” என்று கேட்டான். மன்னன் வெட்கித் தலைகுனிந்து, மல்லனைத் தண்டித்தான்.

கதை தான்! ஆனால் கடைசியில் தண்டனை கிடைக்கிறது, தகாத செயல் புரிந்து விட்டு அதனைத் தம் தீரத்துக்குச் சான்று என்று பேசிய மல்லனுக்கும்... பாரதத்தின் முடிசூடா மன்னனோ ஜீப் ஊழல், உரபேர ஊழல், மாளிகை வாங்குவதில் ஊழல், என்று அடுக்கு அடுக்காக, தன் ஆட்சியிலே ஊழல்கள் நடந்து கொண்டிருப்பது பற்றி அக்கரையே காட்டாமல், ஒரே அறையில் 32 பற்களும் வீழ்ந்ததா ! என்று வியந்திடும் நிலையில் இருக்கும் போது, பெரம்பூரில் எஃகு பாழாக்கப் படுவது பற்றியா அக்கறை காட்டுவார்! குருஷேவ் வந்து அல்லவா இதைக் கூறிக் கண்டிக்க வேண்டியிருக்கிறது.

மக்களை ஆள்வது என்பதற்கும் மக்களாட்சி நடத்துவது என்பதற்கும், உள்ள வித்தியாசம் நன்கு தெரியத்தானே செய்கிறது.

நேருவுக்கும் குருஷேவ்வுக்குமே, மனப்போக்கிலும் கண்ணோட்டத்திலும் இந்த வகையான மாறுபாடு இருக்கிறது என்றால், தங்கத்திரைக்குப் பின்னாலே வீற்றிருக்கும் அமெரிக்கத் தலைவர்களுக்கும் குருஷேவ்வுக்கும் மனப்போக்கிலே உள்ள வித்தியாசம், சாமானியமானதாகவா இருக்கும் !

“என்னவென்றே எனக்குப் புரியவில்லையே ! இந்த ஜனங்கள் ஏன் இப்படி இந்த ரஷியத் தலைவர்களை வரவேற்கிறார்கள். என்ன தந்தார்கள் இந்த ரஷியத் தலைவர்கள் ? என்ன தரமுடியும் ? ஒரு இரும்புத் தொழிற்சாலை அமைத்துத் தர இசைந்திருக்கிறார்களா! அதற்கும் இந்தியா, 47 கோடி ரூபாய் தரவேண்டுமாம்; அமெரிக்கா இதுவரை இந்தியாவுக்குக் கொடுத்துள்ள தொகையின் அளவையும் செய்திருக்கும் உதவியின் வகையையும் ஒப்பிடும்போது, ரஷியர்கள் கொடுத்தது சுண்டைக்காய் அளவுதானே இருக்கிறது ! இருந்தும், இவ்வளவு அமோகமாக வரவேற்கிறார்களே ! காரணம் தெரியவில்லையே!”

லெஸ்டர் பியர்சன் என்ற கனடா நாட்டு மந்திரி இந்தக் கருத்துப்பட, நியுயார்க் நகரில், இந்தத் திங்கள் 28ந் தேதி பேசினார்.

காரணம் தெரியவில்லையாம்—எப்படித் தெரியும் ? தங்கத் திரை கண்ணை மறைக்கிறது.

தங்கத்திரை கண்ணைப் பறிக்கும்வகையில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவும் அதன் ஆதீனத்திலே சிக்கிக்