பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கொண்டுள்ள நாடுகளும், அந்தத் திரையின் தகத்தகாயத்தைக் கண்டு சொக்கிக் கிடக்கின்றன.

பியர்சன், இந்தப் பொன்னொளி கண்டு மயங்காமல் சோவியத் தலைவர்களிடம் ஏன் சொக்கிப் போகிறார்கள் இந்த மக்கள் என்று கேட்கிறார்.

இரும்புப் பெட்டியைத் திறந்து காட்டுகிறது அமெரிக்கா !
இதயத்தைத் திறந்து காட்டுகின்றனர் ரஷியத் தலைவர்கள் !!

காரணம் கேட்கிறாரே, பியர்சன், காரணம் இதுதான். ஆனால் இதை அவர் போன்றார் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்—ஏனெனில் அவர்கள் இன்னமும் இரும்புப் பெட்டியிடம் அச்சத்தால் ஆசை கொள்பவர்களாக உள்ளனர் ; அது மட்டுமா, நேரு பண்டிதரும் இரும்புப் பெட்டிக்காரரின் தோழமையை இழக்க விரும்பாத ஆட்சி முறை நடத்துபவர்தானே என்ற எண்ணம் வேறு, பியர்சன் போன்றாரின் உள்ளத்தைக் குடைகிறது.

இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் உள்ள வேறுபாடும் முரண்பாடும் கூறிட ஆசை எழுகிறது, ஆனால், தம்பி ! அடிகள் கோபிக்கிறார், இடம் இல்லை என்று, எனவே அடுத்த வாரம் பார்ப்போம்.

4—12—1955

அன்புள்ள,
அண்ணாதுரை

கடிதம்: 29

உன்னால் முடியும்

  • புயலின் கொடுமை—மக்கள் துன்பம்—
    கழகப் பணி.

தம்பி,

எந்தப் பிரச்சினையும் நினைவிற்கு வரவில்லை ; நெஞ்சமெலாம் துக்கம் துளைத்தெடுக்கிறது—திகைப்பு தாக்குகிறது—வேதனைப்படு! வேதனைப்படு! வெற்றி ஒளியின் கீறல்களைக் காண்கிறேன்! உள்ளத்தில் உறுதிகொண்டோரின் அணிவகுப்பு காண்கிறேன் ! விடிவெள்ளி காண்கிறேன்! என்றெல்லாம் எக்களித்துக் கிடக்கும் ஏமாளியே! வேதனைப்படு ! வேத-