பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

வேண்டும் என்று—பேசிவிட்டுப் படுத்தனர், உழைத்திடும் அந்த உத்தமர்கள். அந்தோ ! அந்தோ ! அவர்கள் காலையில் கண்டது கதிரவனை அல்ல—அவர்களைக் காலைவரையில்கூட விட்டுவைக்கவில்லை சாவு, பற்றி இழுத்துக்கொண்டு சென்று சின்னாபின்னமாக்கிவிட்டது. கடலிலே கொந்தளிப்பு! பேய்க் காற்று வீசுகிறது, பெருமரங்கள் சாய்கின்றன வேரறுந்து; தோப்புகள் சிதறுகின்றன !—பெருமழை பெய்கிறது இருள் கப்பிக்கொள்கிறது— வயலெல்லாம் ஏரிகளாகி, ஏரிகளெல்லாம் கடலாகி, வாய்க்கால்களெல்லாம் ஆறுகளாகி, ஆறுகளெல்லாம் அழிவு தருவனவாகி, எங்கும் வெள்ளக் காடாகிறது! தூக்கம் கலையுமுன் பேரிடி மனதைப் பிளக்கிறது— உயிர் காத்துக்கொள்ள முயற்சிக்கு முன்பு உருத் தெரியாதபடி, வெள்ளம் மக்களைக் கொள்ளை கொள்கிறது. தம்பி ! நாசம் விளைவித்துள்ள அளவுமட்டுமல்ல, அதன் வேகம் திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. எனவேதான், இத்தனை அளவு உயிரிழப்புகள் — பொருட்சேதம்—அழிவு.

கடல்நீர் ஊருக்குள் படை எடுத்தால், கதிகலங்கிப் போகாமல் என்ன செய்ய இயலும்—எட்டடி பத்தடி உயரத்துக்கு எழும்பி, பேரிரைச்சலுடன் அலைகள் ஊருக்குள்ளே படை எடுக்கும்போது, பீதி போதும் கோழைகளுக்கு, நமது உடன் பிறந்தோர் வீரமாகப் போரிட்டுப் பார்த்திருக்கிறார்கள்—ஒன்றைச் சமாளிப்பதற்குள் மற்றொன்று—என் செய்வர்—கடல் அலைக்குத் தப்பிட, ஒதுக்கிடம் தேடிச் செல்லலாமென்றாலோ, பாதைகள் அழிந்து பட்டுப்போய் எங்கும் வெள்ளம், பெருமழை தாக்கிய வண்ணமிருக்கிறது, பேய்க் காற்று வீசியபடி ! இந்த நிலையில் வீசி எறியப்பட்டவர்கள், மூழ்கி மூச்சுத் திணறிப் போனவர்கள், மோதி நசுக்குண்டவர்கள், அம்மவோ ! எண்ணும்போதே, செவிகளில் பேய்க் காற்றின் கூச்சலையும் மீறிக்கொண்டு கிளம்பும், கதறல் கேட்கிறது. அந்தோ! என்ன எண்ணினரோ, எதை எதை எண்ணிக் கொண்டனரோ, விபரீதம் விளைவித்த அந்த விநாடியின் போது. குழந்தைகள், மந்தி கரம்பட்ட மலராகிவிட்டன! சிறுமதி படைத்தோரிடம் சிக்கிய செல்வம்போல, தமிழகத்தின் உண்மைச் செல்வங்களாம் நம் சிறார்கள், சின்னாபின்னமாகிவிட்டனர். பெரியவர்களோ ! பேய்க் காற்றினால் முறிந்து போயினர். தஞ்சையும் இராமநாதபுரமும், இந்த அழிவுக்கு இலக்காகி, நொந்து கிடக்கின்றன. நமது நெஞ்சம் வெடித்திடும் நிலையில் இருக்கிறது. இதை எங்ஙனம் தாங்கிக்கொள்ள முடியும்!

எரிமலை, நெருப்புக் குழம்பினைக் கக்கும்—பொறி நூறு மைல்களுக்கு அப்பாலும் தெரிக்கும்—தீயிலே நகரங்கள் கரு-