பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

சேரிகள் — பரதவர் குடில்கள்—பட்டாளிகளின் குடிசைகள் — உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள்—இவை யாவும் நாசமாகிவிட்டன—அந்த உத்தமர்களிலே நூற்றுக் கணக்கானவர்கள் மாண்டு போயினர்—மீதமிருப்போருக்கு வீடில்லை, வயலில்லை, உயிர் இருக்கிறது, உள்ளத்தில் திகைப்பின்றி வேறெதுவுமில்லை—ஆனால் தம்பி ! நமது முதலமைச்சர், காமராஜர், அவர்கள் மத்தியில் இருக்கிறார்! பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர், இருக்க வேண்டிய இடம்! ஆம்! அங்கு பெரிய அதிகாரிகள் புடைசூழ இருக்கிறார், பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், என்பதை எண்ணும்போது, கொந்தளித் தெழுந்த கொடுங் கடலே ! குடும்பங்களை அழித்த பேய்க் காற்றே! மக்களை அழிவிலே மூழ்கடித்த பெரு மழையே! அழிவினை, இரக்கமன்றி எம்மீது ஏவினீர்—கர்வம் கொள்ளற்க—பிணமலை கண்டு பெரு வெற்றி கொண்டுவிட்டோம் என்றெண்ணிப் பேயுள்ளம் கொள்ளற்க—அழிவு ஏவினீர்—இதோ எமக்கு ஆறுதல் அளிக்க, எமது முதலமைச்சர் வந்துள்ளார்! எமது கண்ணீரைக் காணுகிறார், தமது கண்ணீரைச் சிந்துகிறார், அழிவு சூழ் இடங்களில் ஆறுதலை அள்ளித் தருகிறார்! கோட்டையில் அமர்ந்து கொண்டு, ‘உத்தரவுகள்’ போடும் முதலமைச்சர் அல்ல இவர் ! ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும் பூஜாரி அல்ல! நமது ஆட்சியின் போது இந்த அழிவு வந்துற்றதே, என்று உளம் பதைத்து, பறந்து வந்தார், எமக்கு வாழ்வளிக்க—என்று மக்கள் எண்ணி வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்; தம்பி ! சொல்லத்தானே வேண்டும். முதலமைச்சர் காமராஜரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப் படுகிறோம். அளவு குறைவு—முறை குறையுடையது—என்று நிபுணர்கள் பேசக்கூடும் நாலாறு மாதங்களுக்குப் பிறகு, ஆனால் முதலமைச்சரின் இதயம் தூய்மையானது, ஏழை எளியோர்பால் அவர் இதுசமயம் காட்டிய அக்கரை தூய்மையானது என்பதை எவரும், எந்நாளும் மறந்திட மாட்டார்கள்—இயலாது.

வளம் கொஞ்சும் தஞ்சை, வாளை துள்ளும் வாவிகளும், கெண்டை புரளும் ஆறுகளும், கமலம் முகம் காட்டும் கழனிகளும், என்றெல்லாம் நாவலரும் பாவலரும் பன்னெடுங்காலமாகவே பாட்டு மொழியால் பாராட்டியுள்ளனர். அங்கு இப்போது பிணமலை.

பேயா மழை பேயுது, பெரிய வெள்ளம் வருகுது ! ஆனால் எல்லாம் வேற்றுச் சீமைகளில், எங்கள் தரணிக்கும் மழைக்கும் நீண்ட காலமாகவே பகை நெளிகிறது என்று அவலச்

680—II—3