பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஆழக் குழி தோண்டிப் போட்டுப் புதைக்கப் போகிறோம், தி. மு. கழகத்தை 1967ம் ஆண்டு என்று, திருச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டிலே பேசியிருக்கிறார்கள்.

என்ன செய்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்—ஐந்தாண்டுத் திட்டம் என்கிறார்கள், சமுதாய நலத்திட்டம் என்கிறார்கள், வட்டார வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள், இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்—நாட்டிலே ஏழை மக்கள் வாழ்விலே பாராட்டப் படத்தக்க விதமான முன்னேற்றம் எதையும் காணாததால் மனம் நொந்து நீ கேட்டிருக்கிறாய் பல முறை, என்னதான் செய்கிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்; என்ன செய்யப் போகிறார்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்றெல்லாம். அவர்கள் கூறிவிட்டார்கள் திருச்சி மாநாட்டில் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை; ஆழமான குழி தோண்டப் போவதாகச் சொல்லிவிட்டார்கள்; 67000 அடி ஆழம்.

என்ன அண்ணா! நம்மைப் போட்டுப் புதைக்கக் குழி தோண்டப் போவதாக அவர்கள் பேசுகிறார்கள் அத்தனை ஆணவத்துடன்; அதைக்கேட்டு நீ பதறாமல் துடிக்காமல், மகிழ்ச்சியுடன் பேசுகிறாயே என்று கேட்கத் தோன்றும். நான் பதறாதற்கும் துடிக்காததற்கும் காரணம் இருக்கிறது.

67000 அடி! கவனமிருக்கட்டும்! அத்தனை ஆழமான குழி ! ஏன்? அவர்களுக்கு அவ்வளவு அச்சம், அத்தனை ஐயப்பாடு! சாதாரண ஆழமுள்ள குழி, ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி தோண்டினால் போதாது, அதிலே போட்டுப் புதைத்தால் பயனில்லை, மீண்டும் எழுந்து வந்துவிடக் கூடும், மிக அதிகமான ஆழம் தோண்டவேண்டும் என்று தோன்றுகிறதே தம்பி! அவர்களுக்கு; அது எனக்கு நமது கழகம் எத்தனைப் பெரியது, எதிரிகளை எந்த அளவுக்கு அச்சப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியச் செய்கிறது. அது எனக்கு ஒருவிதமான மகிழ்ச்சி உணர்வைக்கூடத் தருகிறது. தி. மு. கழகம் சாமான்யமானதல்ல, இந்தியாவை பத்தொன்பது ஆண்டுகளாகக் கட்டி ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்த கழகத்தைப் புதைத்துக் குழியில் போடவேண்டுமென்றால், ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமுள்ள குழி போதாது, 67,000 அடி ஆழமுள்ள குழி தேவைப்படுகிறது என்பதை