பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

சின்ன ஐயா!
எஜமானரு!

புரிகிறதல்லவா, ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற பேச்சு என்பது–

சீமான் இருக்கும்போது அவருடைய மகனை, “ஐயாவோட குழந்தை” என்று அன்புடன் கூறுவர். அந்தக் கட்டத்தில் அன்பு காட்டினால் போதும் என்று தோன்றுகிறது.

சீமானுடைய பிள்ளை, வாலிபப் பருவமடைந்ததும் அடங்கிக் கிடப்போருக்கு, முன்புபோல அன்புடன் குழந்தை என்று கூறிடக் கூச்சமாக இருக்கிறது; எஜமானரோட மகன்! என்று கூறுகின்றனர். அன்பு போதுமானது அல்ல என்று ஓர் உணர்வு; மதிப்புக் காட்டவேண்டும் என்ற ஒரு நினைப்பு. குழந்தை அல்ல, வாலிபன்; அதாவது சீமானுடைய பணப்பெட்டிக்கு அருகே சென்று கொண்டிருக்கும் நிலை! ஆகவே மதிப்பளிக்க வேண்டி இருக்கிறது.

ஆண்டுகள் சில செல்கின்றன! சீமான் பழைய முடுக்கை இப்போது கஷ்டப்பட்டுத்தான் மேற்கொள்ள முடிகிறது. கர்ஜனையில் கடுமை கலந்திட முடியவில்லை. மகனோ? விழியை உருட்டிக் காட்டுகிறான். விரைவில் ‘பட்டம்’ சூட்டிக்கொள்ள இருக்கிறான் என்றே தோன்றுகிறது. அப்போது, அன்பு – மதிப்பு – என்னும் உணர்ச்சி போதுமானது அல்ல என்று தோன்றுகிறது. அடக்க ஒடுக்கமாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது; சின்ன எஜமானர் என்று பயம் கலந்த குரலில் பேசத் தலைப்படுகின்றனர்.

பத்து நாளாக அவர் வெளியே உலாவச் செல்லவில்லை. பழரசத்தில் மருந்து கலந்து தருகிறார்களாம் களைப்பும் இளைப்பும் போக என்ற முறையில் பற்றி ஊரார் பேசிக்கொள்ளும் நிலையின்போது, அவர் மகனைச் ‘சின்ன ஐயா’ என்று அழைக்கின்றனர் – ஐயா என்பதை அழுத்தி ‘சின்ன’ என்ற அடைமொழி அதிக நாட்களுக்குத் தேவைப்படாது என்ற நினைப்புடன்.

சீமான் ‘சிவலோகப் பிராப்தி’ அடைந்துவிடுகிறார்; ஐயா! என்று மரியாதையும் அச்சமும் கலந்த முறையில் அழைக்கிறார்கள்.