பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

“அதுசரி இப்படிப்பட்ட ஆளை, ஏன் காங்கிரஸ் கட்சி சேர்த்துக் கொண்டது?”

“ஊரிலே பெரிய ஆள்—பணக்காரன் என்பதனாலேதான்”

“பாவம்! பண்டரி, படாதபாடு பட்டுவந்தான் காங்கிரசுக்கு—அவனை நிற்க வைத்திருக்கலாம்”

“ஆமாம்! அவன்கூடக் கேட்டானாம் கெஞ்சினானாம்!”

“கடைசியில், ‘எதற்கும் உதவாததை’ப் பிடித்து நிற்கவைத்து விட்டார்கள்.”

“இது போய் அங்கே என்ன செய்யும்?”

“செய்வதாவது, மண்ணாவது! தூக்கு கையை என்றால் தூக்கும்! மற்ற நேரத்தில் தூங்கி விழும்!”

பல தொகுதிகளில், பொதுமக்கள் இதுபோலப் பேசிக்கொண்டனர்—அபேட்சகர்களின் ‘யோக்யதாம்சங்களை’ப் பற்றி; ‘ஓட்’ மட்டும் போட்டனர்—ஆளுக்காக அல்ல, கட்சிக்காக. இது கட்சிக்குள்ள சக்தியை, பிரசாரத்துக்குள்ள பலத்தை விளக்கிற்று—ஆனால் அதேபோது மக்களாட்சி முறையின் மாண்பையும் மாய்த்துவிட்டது. குன்றின்மீது மூலிகையும் உண்டு, முள்ளும் உண்டு! ஆனால் குறைமதியாளர் தவிர மற்றையோர், குன்றின்மீது உள்ளதெல்லாம் மூலிகை என்று கொள்ளார்—மூலிகை இது, முள் அது என்று பிரித்து எடுத்துப் பயன்படுத்துவர்! ஆனால் ‘குன்றுக்கு’ ஒரு ‘மகிமை’ கற்பித்து, அதன்மீது இருக்கும் ‘எதை’ எடுத்து உபயோகித்தாலும் ‘புண்யம்’ என்று கூறிவிட்டால், பெரும்பாலான மக்கள், மூலிகையா முள்ளா என்று ஆராயமாட்டார்கள், கிடைத்ததைக்கொண்டு களிப்படைவர். அதுபோல ஆயிற்று, தேர்தல்! யாரும் ‘வர முடிந்தது’ முலாம் பூசிக்கொண்டதும்!

மக்கள் அளித்த ‘ஓட்டு’ தமக்கு அல்ல, தம்மைத் தழுவி உள்ள கட்சிக்கு—என்பது, அபேட்சகர்களுக்கும், ஒரு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்தது—யாரும் தம்மை ஏதும் கேட்க முடியாது, என்ற தைரியத்தை! அவர்களில் பலர், வெளிப்படையாகவே “எனக்கா ‘ஓட்டு’ தந்தனர்—