பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

காங்கிரஸ் விடுதலைப்போர் நடாத்தி நாட்டுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்ததற்காக மதித்திட போற்றிட மனமற்றவர்கள், காங்கிரஸ் ஆட்சியை நடத்த ஆரம்பித்த பிறகு மதித்திட, போற்றிட முன் வந்திடின், என்ன பொருள்? உள்ளன்பு என்றா அதனைக் கூறமுடியும், ஆசையோ அச்சமோ அதற்கு காரணமாக இருக்கமுடியுமே தவிர பாசம்—பற்று—என்றா கூற முடியும்? பேதையும் கூறிடானே!</poem>}}

காங்கிரசில் இடம் பிடித்து கொண்டவர்களின் இயல்புக்குத் தக்கபடி, அந்தக் கட்சியும் அதனால் நடத்தப்படும் ஆட்சியும் இன்று இயல்புகளைப் பெற்றுக் கொண்டுவிட்டது.

அந்த இயல்புகளைத்தான் நாம் வெறுக்கிறோம், கண்டிக்கிறோம்.

தம்பி! சர்க்கரைப் பொங்கலிலே முந்திரிப்பருப்பு போடுவது முறை, தேவை; ஆனால் சர்க்கரைப் பொங்கலிலே இலுப்பைக் கொட்டைகளைப் போட்டிடின், எவர் விரும்புவர்? என்ன ஆகும் அந்த இனிப்புப் பண்டம்! முக்கனிச் சாற்றினிலே ஒருபிடி தெருப் புழுதியைக் கலந்திடின், பருகிட எவர் இசைவர்?

இன்றையக் காங்கிரசின் இந்த நிலையினை உணர்ந்ததால்தான், பலர், அந்தக் கட்சியைவிட்டு வெளியே சென்றுவிட்டனர்; பலர் இருக்கின்றனர் ஒப்புக்கு; கட்சியில் இடம் பிடித்துக்கொண்டவர்கள் செய்திடும் பாதகங்களுக்கு உடந்தையாக இருந்து தீரவேண்டி நேரிட்டுவிட்டதே என்ற வேதனையைச் சுமந்து கொண்டு.

இன்றையக் காங்கிரஸ், எவருக்குப் பயன்பட்டு வருகிறது என்பதைக் கண்டதாலேதான், பொதுமக்கள் இன்று கழகத்தை ஆதரிக்கின்றனர்.

இன்றையக் காங்கிரசிடம் சுவைமிக்க பலன் எதிர்பார்த்து இளித்துக் கிடப்போரே அதிகம் உளர், பற்றுவைத்துள்ளவர் அதிகம் இல்லை என்பதை உணர்ந்ததால்தான், மக்களுக்கு மனமயக்கம் தரத்தக்கது எதையாகிலும் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்குக் காங்கிரஸ் ‘சூத்திரதாரிகள்’ வந்துள்ளனர்.

அத்தகைய மனமயக்கத்தை ஊட்டவே, ‘சோஷியலிசம்’ பேசுகின்றனர்.