பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்சமாலை! கட்கத்தில், எதையோ பட்டுத் துணியால் போர்த்து வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர் அன்புடனும், பக்தியுடனும் வரவேற்கிறார்; கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது; அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழிகாட்டப் போகிறார். நமக்கு இது ஓர் நன்னாள்! நல்லாசான், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோல பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக என்று கூறி வரவேற்கிறார் — வந்தவர் குறுநகை புரிகிறார்– வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம் என்று எண்ணுகிறார்; வந்தவர், கட்கத்திலிருந்த மூட்டையை அவிழ்க்கிறார் கூரிய வாள், மின்னுகிறது–மன்னனின் மார்பில் பாய்கிறது – அவர் சாய்கிறார்– சதிகாரன் களிக்கிறான்– வேடம் பலித்தது–வெற்றி கிடைத்தது! வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது – இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான்.

ரு மன்னர்கள் போரிட்டனர். அதிலொருவன் போரில் புலி – மற்றவன் குணத்தால் நரி. புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்கள் பாதத்தைச் சிரமீது கொள்ளவும் தயங்காக்குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக்குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக்கொண்டான். உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டுகொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீரவேந்தனைத் தனியாகக் கண்டு சிலபேச அனுமதி கோரினான்; வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான். மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி – தன்யனானேன் என்றான் சூதறியா மன்னன், உயிரை இழந்தான்.

மெய்ப்பொருள் நாயனார் கதை என்று கூறுவர். இதனைப் பெரிய புராணத்தில் – வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனைச் சிவபக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர்; கதைகளைப் பக்தர்கள்,