பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கேட்டிருந்திருப்பின், படுகொலை நேரிட்டிருக்காதே! அது போலவேதான் தம்பி! ஜனநாயகமா? மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! சோஷியலிசமா? மிக்க மகிழ்ச்சி! வரவேற்கிறோம்! ஆனால், இவர் யார்? அதோ அவர் யார்? இவருடைய நிலை என்ன, விலை என்ன, வேலை என்ன? அதோ அவருடைய இயல்பு என்ன, இருப்பு எவ்வளவு? இவர் போன்றார் உள்ள இடத்திலா சோஷியலிசம் வளரும், மலரும்? என்று கேட்டிடத் தெளிவும் துணிவும் வேண்டும்! இல்லையேல், உரிமை படுகொலை செய்யப்பட்டுவிடும்!

விதை தூவினால் மட்டுமே, பயிர்! ஆனால் எங்கே தூவினால்? பாறைமீது தூவிய விதை, பறவைகளுக்கு; பயிர் ஆகிடாது!

நெல்லும் பதரும், ஒரே வடிவம்! நெல்லென்று எண்ணிக்கொண்டு பதரினை விதையாகத் தூவிடின், நிலம் தரமாக இருந்திடினும் முளை கிளம்பிடுமோ!!

பாறை மீது தூவிய விதைபோலவே இன்று காமராஜர் பேசிடும் ஜனநாயக சோஷியலிசம் உளது. இதனை உணருவதற்கு அதிகமான முயற்சியும் தேவையில்லை. அவருடைய உலாவின்போது உடன் இருப்போரைக் கண்டாலே போதும்.

உடன் இருப்போர் ஊர்க் குடிகெடுப்போர் என்று மக்கள் அறிவர்! உடனிருப்போர், பிறர் உழைப்பின் பலனை உண்டு கொழுப்போர்; இதனை ஊரறியும்.

ஆனால் அந்த உத்தமர்களை வைத்துக்கொண்டு சோஷியலிசம் பேசுகிறார், பெரியவர்! அவர்களும், ஆமாம்! சோஷியலிசத்தைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம்!!–என்கிறார்கள்.

இந்தியாவுடன் நட்பு வேண்டும் என்று தான் சீனா கேட்கிறது!! எல்லையைக் கொத்திக் கொண்டே!!

இங்குள்ள முதலாளிமார்களும், ஏழையின் வாழ்வை வதைத்துக் கொண்டே, சோஷியலிசக் கீதம் பாடுகிறார்கள். மெய்ப் பொருள் நாயனார் கதை போலவே இருக்கிறது அவர்கள் ஏழை எளியோரிடம் காட்டிடும் சோஷியலிசக் கோலம்!!