பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

கொண்டீர்கள் என்றல்லவா தோன்றுகிறது. ஐயா! நான் என் சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதிவைத்துவிட்டேன் என்றேன். உடனே உங்களுக்குக் கோயில் குளம், சத்திரம் சாவடி இவைகளின் மீது கவனம் போயிற்று; நான் அந்தத் தருமத்தைச் சொல்லவில்லை ஐயா! சொத்து முழுவதையும் என் பங்காளிகள் ஏதாகிலும் பிற்காலத்திலே பற்றிக்கொள்ளக் கிளம்புவார்களோ என்ற பயத்தில், இப்போதே என் மனைவி பேருக்கு எழுதிவைத்துவிட்டேன். அதைத்தான் நான் சொன்னேன், சொத்து முழுவதையும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று என் மனைவி பெயர் தர்மாம்பாள்—செல்லமாக தருமு! தருமு! என்று அழைப்பேன்! அதனால் சொத்து அவ்வளவும் தருமத்துக்கு எழுதி வைத்துவிட்டேன் என்று சொன்னேன் என்றார்; நிருபர்கள் திணறிப் போயினர்! விஷயம் இப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்காமல், சீமானை, வள்ளல் என்றும் தருமவான் என்றும் ஏகப்பட்ட தூக்கு தூக்கிவிட்டோமே! ஆசாமி நம்மைப் பைத்தியக்காரராக்கி விட்டாரே என்று எண்ணி வெட்கப்பட்டனர்.

தருமாம்பாளுக்கு என்று சொல்வதற்குப் பதிலாக தருமத்துக்கு என்று சொன்னதால் இத்தனை விபரீதமான அர்த்தம் எழும்பிவிட்டது.

இந்தக் கதைதான் தம்பி! நினைவிற்கு வருகிறது, காங்கிரஸ் கட்சி இப்போது பேசிக்கொண்டு வரும் பேச்சைக் கேட்கும் போது.

மறை பொருள்
இரு பொருள்
குறை பொருள்

இந்த முறையிலே கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி அவர்கள் பேசுவதால், முழுப் பொருளை, உண்மைப் பொருளை அறிந்து கொள்ளாதவர்கள், மயங்குகின்றனர்; வேறு விதமான பொருள் கொள்ளுகின்றனர்.

இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளமுனைகிறது காங்கிரஸ் கட்சி.

இந்த விதமான ‘இருபொருள்’ தரும் பேச்சை ஒரு பொறுப்புள்ள கட்சி பேசுவதை ஜனநாயகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டினர் ஏற்கமாட்டார்கள். இங்கு?