13
அந்தத் தத்துவம் நடைமுறைக்கே வந்து விட்டதோ என்று சொல்லத்தக்க நிலைமைகள் உருவாகிக் கொண்டு வருகின்றன.
தம்பி! ஒன்று கூறுவர் காங்கிரசார், கூறுகின்றனர்; இந்தக்கிளர்ச்சிகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றன—என்று.
எதிர்க் கட்சிகள் கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன என்றே வாதத்துக்காக வைத்துக்கொள்வோம்; மக்கள் என்ன ஏமாளிகளா, அவர்கள் அறியார்களா, கிளர்ச்சியை ஒடுக்கத் தடியடி நடக்கும், துப்பாக்கியால் சுடுவார்கள் என்பதனை? தெரிந்தும் கிளர்ச்சியில் ஏன் ஈடுபடுகிறார்கள்?
எந்த எதிர்க்கட்சியும், தடியடிபட வருவீர்! துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாக வருவீர் என்று மக்களை அழைத்துவர முடியாது. ஆனால், நடைபெறும் கிளர்ச்சிகள், ஆட்சியின் அலங்கோலத்தின் விளைவு என்பதை உணராதவர்கள் எதிர்க்கட்சிகள்மீது பழிபோடுகின்றனர்.
இதனை முட்டாள்தனம் என்று கண்டித்திருக்கிறார் ஒரு பேரறிவாளர்; இன்றைய ஆட்சியாளர்களும் போற்றித் தீரவேண்டிய பேரறிவாளர்.