பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சொல்லழகும் பொருளழகும் இழைந்துள்ள நற்கவிதை இயற்றிடுவோன் அக்கவிதையினைச் சுவைத்திட, பயன் பெற்றிட இசைந்து வந்திடுவோர் உளர் என்ற உணர்வினைப் பெற்றாலொழிய உள்ளத்திலிருந்து கவிதா சக்தி சுரந்திடுமா?

எடுத்துக்கொள்ளும் எந்தச் செயலினையும் பாராட்டி வரவேற்றிடவும், ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளவும் தக்கார் உளர் என்ற எண்ணம், மேற்கொள்ளும் செயலினைச் செம்மையான தாக்கிடுமல்லவா?

தாயின் அன்பினைப் பெற்றிட வாய்ப்பற்ற குழந்தை எத்தனை அழகுடன் விளங்கியும் பயன் என்ன!

இதழ் நடாத்தப்படுகிறது, மலர் வெளியிடப்படுகிறது. ஆயினும் அவற்றினைப் பெற்றிடுவதில் மகிழ்ச்சியும், பயன் பெறுவதில் சுவையும் தேடிடுவோரின் தொகை மிகுதியாகவும், வளர்ந்தவண்ணமும் இருந்தாலொழிய, எண்ணங்களை வடித்தெடுத்து இதழிலும் மலரிலும் தந்து வருவது எற்றுக்கு என்ற ஏக்கமல்லவா மனத்தினைக் குடைந்திடும் என்பது பற்றிய எண்ணம், இவை பற்றிய நினைவினைக் கொண்டு வந்து சேர்த்தது.

ஆனால், கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் அத்தகைய கவலை குடைந்திடும் நிலையினை மூட்டி விடவில்லை. ‘காஞ்சி’ இதழினுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளித்து வருகின்றனர். மகிழ்ச்சி நன்றி.

‘காஞ்சி’ இதழும், கழகக் கருத்துக்களைப் பரப்பிவரும் மற்றைய இதழ்களும், முழுக்க முழுக்கத் தம்மைக் கழகத்திடம் ஒப்படைத்து விட்டவர்களால் நடத்தப்பட்டு வருவதாகும்.

ஏழெட்டுத் துணையாசிரியர்கள், மூன்று நான்கு ஓவியர்கள், சுறுசுறுப்பு மிக்க விளம்பரத் துறைக் குழுவினர் ஆகியோர் புடைசூழ ஆசிரியர் அமர்ந்தபடி, கண்களை மூடியபடி இந்த இதழில் என்ன வண்ணம் காட்டிடலாம், எந்தச் சுவையைக் கூட்டிடலாம் என்று சிந்தித்துப் பார்த்து எழில் ஏடுகள் பலவற்றினை ஒப்பிட்டுப் பார்த்து, வனப்பு மிக்க விதமான இதழினைத் தந்திடும் வகை காண்பது என்பதெல்லாம், வேறு இதழ்களில்; கழக இதழ் நடாத்துவோர் மாலையில் மன்னார்குடி, காலையில் காட்பாடி,