பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

முத்தமிழும் முத்தும் முழங்கிடும் திருநாடு நம் நாடு. கத்தும் கடல் அடக்கிக் களம் செலுத்திக் கடாரம் சென்றோர் நம் இனத்தார். நாமணக்கப் பாப்பாடி நற்றமிழை நல்லவையைப் பாமணக்கச் செய்ய வந்த பாவலர்கள் தேனொத்த தீந்தமிழைத் தந்திடும் திருநாடு, நம் நாடு. எனினும்......?

ஓர் ஏக்கம்—ஓர் பெருமூச்சு—ஓர் குமுறல் அன்றோ, அந்த ‘எனினும்’ என்பதுடன் பிறந்திடக் காண்கிறோம். அந்த ஏக்கம் போக்கிட, பெரு மூச்சு நின்று ஓர் புன்னகை மலர்ந்திடக் குமுறல் அகன்று மனத்திலே ஓர் நிம்மதி எழுந்திட, எடுத்துக்கொள்ளப்படும் இணையற்ற முயற்சியில், தனது பங்கினைச் செலுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது ‘காஞ்சி’.

தம்பியாம் நீ திரட்டித் தந்திடும் பேராதரவே, ‘காஞ்சி’ இதழின் பணி செம்மையுடையதாகிடச் செய்திடும்.

‘காஞ்சி’ நடாத்திடும் இளங்கோவனும், உடனிருந்து பணியாற்றும் முத்துராமனும், சுந்தரேசனும் அவ்வப்போது கதை, கவிதை, கட்டுரை வழங்கிடும் நண்பர்களும், ஓவியம் தீட்டித் தந்திடுவோரும், இதழின் எழிலும் பயனும் மிகுந்திட வேண்டுமென விழைகின்றனர்.

எந்த எழிலும் தம்பி! உன் கரம் தந்திடும் எழிலுக்கு நிகராகாதன்றோ! இதோ என்னிடம்! என்னிடமுந்தான்!!– என்று கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் ‘காஞ்சி’யைக் கரத்தில் கொண்டு கூறிடுவதைக் காட்டிலும் இனிய இசை வேறு எது இருக்க முடியும்—என் செவிக்கு!

அந்த மகிழ்ச்சியினை அளித்துவரும் மாண்புக்கு நன்றி கூறி, ‘மலர்’ கண்டிடுவாய், மணம் நுகர்ந்திடுவாய் என்று அழைத்துத் தருகின்றேன், நாட்டுக்கு எழிலும் ஆட்சிக்கு ஏற்றமும் தேடித் தந்திடும் முயற்சியினை மேற்கொண்டுள்ள ‘காஞ்சி’ இதழின், இரண்டாம் ஆண்டு மலரினை.


11—9—'66

அண்ணன்,
அண்ணாதுரை