பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஆகுதுபார்! அரசு ஆளப்போகுதாமா அவ கொழந்தை... கிடக்கட்டும். கைக்கொழந்தைக்கு யாருதான் காவலு?

குடும்பத்தோடு கிளம்புறா மெய்யம்மெ. கொழந்தைக்கு காவல் இருக்க, பொதுஊரான்தான் கிடைப்பான்.

பொதுஊரானா? அவனுக்குத் தூபம் போட்டு விடலாமே, நாம ஒண்ணு சேர்ந்தா...

வழி இருக்குது அதுக்கு. நான் முன்னமேயே யோசனை செய்து வைத்திருக்கறேன்...

பலே பலே! என்ன யோசனை? சொல்லு, சொல்லு...

பச்சைக் கொழந்தை, பாவம்! அதைத் தனியா விட்டு விட்டு, இவங்களோட போக்கைப்பாரு, தீமிதிக்கக் கிளம்பி விட்டாங்க; இது முறையா சொல்லு, இது நியாயமா சொல்லு! அப்படி இப்படின்னு பேசினாப் போதும் பொதூரான் உருகிப் போய்விடுவான். தீமிதிக்கப் போனவங்களை வெறுத்துவிடுவான்...

கொழந்தைக்குக் காவல் இருக்கமாட்டானா...

நாம சொல்கிறபடி அவனைக் கேட்கச் செய்யலாம். பாவம், கொழந்தையை உன்னாலே பாதுகாக்க முடியாது. கொடு இப்படி, நான் பார்த்துக் கொள்றேன்னு சொன்னா, கொழந்தையைக் கொடுத்துவிடுவான்.

கழுத்திலே இருக்கிறது எனக்கு, இப்பவே சொல்லிவிட்டேன்.

காலிலே உள்ளதும் கையிலே உள்ளதும் எனக்கு சரி தானே...

மெதுவாப் பேசு, யார் காதிலேயாவது விழுந்துவிடப் போகுது. மெய்யம்மை குடும்பத்தோட கிளம்பற மட்டும் வெளியே மூச்சுவிடாதே, விவரத்தை; காரியம் கெட்டு விடப் போகுது.

மெய்யம்மையிடம் பேசிவிட்டு, வெளியே வேறு வேலையாகச் சென்ற கருத்தப்பன் சாவடிப் பக்கத்திலே கோட்டையூரானும் கோலெடுத்தானும் பேசிக் கொண்டிருக்கக் காண்கின்றான்.